புதுடெல்லி: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை அடுத்து அதானி முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகின்றது. இது தொடர்பாக பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல்காந்தி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அவர் ஏன் பயப்படுகிறார். முழு ஊழல் குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். மேலும் இதனால் இந்தியாவின் பங்குசந்தையின் நேர்மை குறித்து கவலை எழுந்துள்ளது என்று கூறியிருந்தார். இது தொடர்பாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியை குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சித்துள்ளார்.
டெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணை தலைவர் தன்கார், ‘‘நமது இளைஞர்கள் நாட்டைவிட அரசியல் நோக்கத்தை உறுதியாய் ஆதரிக்கும் அல்லது சுயநலத்தோடு இருக்கும் சக்திகளை எதிர்த்து மட்டுப்படுத்த வேண்டும். அதனை நாம் அனுமதிக்க முடியாது. அது நடக்கிறது. ஒருவரின் அதிகார வரம்பு அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது. அது சட்டமன்றமாக இருந்தாலும் சரி, நிர்வாகமாக இருந்தாலும் சரி, நீதித்துறையாக இருந்தாலும் சரி. அதன் அதிகார உச்சவரம்பு தீர்மானிக்கப்படுகின்றது.
உலகில் எந்த நாடாக இருந்தாலும், அது அமெரிக்க உச்சநீதிமன்றமாக இருந்தாலும் சரி, இங்கிலாந்தில் உள்ள உச்சநீதிமன்றம், அல்லது வேறு எந்த வடிவிலானதாக இருந்தாலும் அங்கெல்லாம் தாமாக முன்வந்து வழக்குகளை எடுத்ததில்லை. அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அம்சங்களைத் தாண்டி யாருக்கும் தீர்வு கிடைத்ததில்லை. விசாரணை நீதிமன்ற வரம்பு, மேல்முறையீட்டு நீதிமன்ற வரம்பு போன்றவற்றிற்கு அரசியல் சாசனத்திலேயே வகை செய்யப்பட்டுள்ளது. மறு ஆய்வுக்கும் அதில் இடம் உள்ளது.
ஆனால், நமது பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கிலான கட்டுக்கதை பற்றி தாமாக முன்வந்து விசாரிக்குமாறு, அரசியல் சாசனப் பொறுப்பில் உள்ள ஒருவர் கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டிருப்பதை அறிந்து நான் மிகவும் கவலையடைந்தேன். தேச நலனை விட சுயநலன் அல்லது பிரிவினைக்கு முன்னுரிமை அளிக்கும் சக்திகளை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும். இளைஞர்கள் ஐஏஎஸ் மோகத்தை கைவிட்டு, வழக்கமான வேலைவாய்ப்புகளைத் தாண்டி புதிய மற்றும் பயனுள்ள வேலைவாய்ப்புகளை நாட வேண்டும்’’ என்றார்.