சென்னை: தரமான சாலைகள், மேம்பாலங்களே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயனுடையதாக இருக்கும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். நெடுஞ்சாலைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் பணிகளையும், புதியதாக தொடங்கப்பட வேண்டிய பணிகளையும் நேற்று சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய பயிற்சி கூட்ட அரங்கில் ஆய்வு செய்து, அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வழங்கினார்.
திட்டப் பணிகளை ஆய்வு செய்து அமைச்சர் பேசியதாவது: 2,786 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளைரூ.3,056 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு, இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், 605 கிலோ மீட்டர் நீளமுடைய ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளைரூ.675 கோடி மதிப்பீட்டில், மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சாலைகளை தரமானதாக இருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளில் 381 பாலங்கள்,ரூ.1,777 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாலங்களின் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
சென்னையில் நடைபெறும் அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்பட வேண்டும். கிழக்கு கடற்கரை சாலை, தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை மற்றும் மத்திய கைலாஷ் மேம்பால பணிகளின் காலதாமதத்தை தவிர்க்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆம்பூர் மேம்பாலங்களில் நீண்டநாட்களாக முடிக்கப்படாமல் இருப்பதால் அப்பணிகளை விரைந்து முடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் 43 ரயில்வே மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் தரமுடையதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தரமான சாலைகளே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயனுடையதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் செல்வராஜ், திட்ட இயக்குநர் ராமன், சிறப்பு அலுவலர் (டெக்னிக்கல்) சந்திரசேகர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.