சென்னை: மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ என்னும் திட்டத்தில் ஆண்டுக்கு 1,256 உயர் மருத்துவ சேவை முகாம்கள் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. ஜூன் 2025 முதல் பிப்ரவரி / மார்ச் 2026 வரை 1256 உயர் மருத்துவ சேவை முகாம்கள், ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒரு முகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 லட்சத்திற்கு குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்டவர்கள், பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆகியோரை இலக்காக கொண்டு இந்த முகாம்கள் நடத்தப்பட வேண்டும். ஆண்டுதோறும் 1,256 உயர் மருத்துவ சேவை முகாம்கள் நடத்துவதற்கான மொத்த செலவினம் ரூ.13.59 கோடிக்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.