சென்னை: தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் மகிழ்ச்சி தருவதாக உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (5.10.2023) சென்னை, போரூரில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தால், எரிசக்தித் துறையில் தனித்திறன் வாய்ந்த 2500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு பல பொருளாதார குறியீடுகளில் அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. இந்நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், பெரும் அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுடன், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
வணிக நடைமுறைச் சட்டம் / விதிகளில் பெருமளவிலான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, அனுமதிகள் பெறுவதை இலகுவாக்கியதன் விளைவாக, தொழில் செய்வதற்கு உகந்த மாநிலங்களின் தரவரிசையில்,
14-ஆம் இடத்திலிருந்த தமிழ்நாடு, வெகுவாக முன்னேறி தற்போது 3-ஆம் இடத்தை பெற்றுள்ளது. குறிப்பிட்ட ஒரு சில துறைகளை மட்டும் சார்ந்து இல்லாமல், பல்வேறு துறைகள் குறிப்பாக வளர்ந்துவரும் துறைகளான மின் வாகனங்கள், மின்கலன்கள், பசுமை எரிசக்தி, வான்வெளி மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதை ஊக்குவிப்பதற்கு, துறைவாரியாக கொள்கைகளை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட தொழில் பூங்காக்களையும் அமைத்து வருகிறது.
2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நிர்ணயித்துள்ள இலக்கினை எய்துவதற்காக, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியதன் விளைவாக, இவ்வரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை, 4,15,282 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.2,97,196 கோடி மதிப்பிலான 241 முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளின் அடுத்த கட்டமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், சென்னையில் சிறப்பான முறையில் நடத்தி, பெருமளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மேற்கொண்டு வருகின்றது.
ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமம், உலகெங்கிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைக் கொண்ட உலகளாவிய ஃபர்ச்சூன் (Global Fortune) 500 நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அதன் துணை நிறுவனங்களில் ஒன்றான ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனம், சுவிட்சர்லாந்தினை தனது தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இதன் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் முன்னதாக பிப்ரவரி 2023ல், தனது எரிசக்தி திட்டத்தினை சென்னையில் தொடங்கியுள்ளது.
தற்போது, இந்நிறுவனம், சென்னை, போரூரில் ஒரு உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை அமைத்துள்ளது. 3 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தில், சுமார் 50,000 சதுர அடியில் ஒரு பிரத்யேக ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் எரிசக்தித் துறையில் முனைவர் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்ற 2500 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இந்த உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை இன்று திறந்து வைத்தார்.
மேலும், முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாணவ, மாணவியர்களுக்கு அந்நிறுவனத்தில் உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புக்கான பயிற்சி (Internship) பெறுவதற்கு அனுமதி கடிதங்களையும் வழங்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளில், 30-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres – GCCs) தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. உலகளவில் தமிழ்நாட்டின் போட்டித்தன்மையை வெகுவாக அதிகரிக்க இவை பெரிதும் உதவும்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர் கே. கணபதி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு, ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கிளாடியோ ஃபாச்சின், ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் என். வேணு, தலைமை தொழில்நுட்ப அலுவலர் திரு. உர்ஸ் டோக்வில்லர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.