சிம்லா: இறைச்சி சாப்பிடுவதால் தான் நிலச்சரிவு, மேக வெடிப்பு ஏற்படுகிறது என்று ஐஐடி இயக்குனர் கூறிய சர்ச்சை கருத்தால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) இயக்குனர் லக்ஷ்மிதர் பெஹரா, கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் மாணவர்கள் முன்பு ஆற்றிய உரையில், ‘இமாச்சலப் பிரதேசத்தில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதால் தான் நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. தொடர்ந்து விலங்குகளை துன்புறுத்தி வந்தால், இமாச்சலப் பிரதேசம் அழிந்துவிடும். எனவே மிருகங்களைக் கொல்கிறீர்கள். விலங்குகளின் வாழ்க்கை முறையானது சுற்றுச்சூழலுடன் தொடர்புடையது. மாணவர்கள் இனிமேல் விலங்குகளின் இறைச்சி உணவை சாப்பிட மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். மாணவர்கள் நல்ல மனிதர்களாக மாற வேண்டும் என்றால், இறைச்சி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்’ என்றார்.
இவரது கருத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பெஹரா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளதால், பலரும் அவரது பேச்சு குறித்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இருந்தும் தான் பேசிய சர்ச்சை கருத்து குறித்து, இதுவரை பெஹரா தரப்பில் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதுகுறித்து தொழில்முனைவோரும், ஐஐடி டெல்லியின் முன்னாள் மாணவருமான சந்தீப் என்பவர் வெளியிட்ட பதிவில், ‘இந்த நாட்டில் கடந்த 70 ஆண்டுகளாக எவையெல்லாம் கட்டமைக்கப்பட்டதோ, அவற்றை மூடநம்பிக்கையின் மூலம் இந்த முட்டாள்கள் அழித்து விடுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார். பெஹராவின் சர்ச்சை கருத்து பெரும் விவாதமாக மாறியுள்ள நிலையில், அவர் ஏற்கனவே ‘வேத மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம், எனது நண்பர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தீய சக்திகளிடமிருந்து விடுவித்தேன்’ என்று கூறினார். தற்போது நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு காரணம், மக்கள் இறைச்சி சாப்பிடுவது தான் என்று சர்ச்சை கருத்தை கூறியுள்ளதால், அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.