நன்றி குங்குமம் தோழி
‘நல்லா சாப்பிடணும், நல்லதையே சாப்பிடணும் என்றால் வாங்க…’ என்று அழைப்பு விடுக்கிறார், உமா சுப்பிரமணியன். கண்டதையும் தின்று உடம்பை குப்பைத் தொட்டிப் போல் மாற்றி வைத்திருக்கிறோம். மார்க்கெட்டில் விற்கப்படும் பலவிதமான துரித உணவுகளால் நாம் நம் பாரம்பரிய உணவினை விட்டு வெகு தொலைவு நகர்ந்து வந்துவிட்டோம். வயிற்றின் நலன் தாண்டி நாவிற்கு அடிமையாகி, அந்த உணவே நம்முடைய அன்றாட உணவு என்று வாழ்ந்து வருகிறோம்.
அதன் பலன் வரிசைக் கட்டிக் கொண்டு நிற்கும் உடல் உபாதைகள், கேள்விப்படாத நோய்கள் என்று நம்மை ஒவ்வொன்றாக ஆட்டிப் படைக்க ஆரம்பிக்க துவங்கி இருக்கின்றன. இதில் இருந்து நாம் இப்போதே விழிக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் நாம் பலவித உடல்ரீதியிலான பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால், தற்போது மக்கள் சுவைக்காக உணவுகளை விரும்பி சாப்பிட்டாலும், தங்களின் உடல் நலனிலும் கொஞ்சம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அவர்களின் விருப்பத்தை புரிந்து கொண்ட உமா, சென்னை அண்ணாநகரில் நாம் மறந்து போன பாரம்பரிய உணவுகளை மீட்ெடடுத்து, அந்த உணவினை தன்னுடைய அமிழ்தம் என்ற உணவகம் மூலம் வழங்கி வருகிறார்.
‘‘நான் திருநெல்வேலிக்காரப் பொண்ணு. ஐ.டி. துறையில் சாஃப்ட்வேர் எஞ்சினியரா வேலை பார்த்துட்டு இருந்தேன். திருமணம், குழந்தைகள் என்று வந்த பிறகு என்னால் வேலையினை தொடர முடியவில்லை. குடும்பம், குழந்தைகள் பராமரிப்பு என்று பத்தாண்டுகள் நகர்ந்துவிட்டது. குழந்தைகளும் தங்களின் வேலைகளை பார்த்துக்கொள்ள ஆரம்பிக்க துவங்கினார்கள். எனக்கான நேரம் இருப்பதாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் ஒரு பிசினஸ் செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. அந்த சமயத்தில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த காலகட்டம்.
அந்த பாதிப்பு எல்லோருடைய மனதிலும் ஆரோக்கியமான உணவுகள் குறித்த ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தி சென்றது. பலரும் ஆரோக்கியமான உணவுகளை தேடி சாப்பிட ஆரம்பித்தார்கள். எங்க வீட்டில் பொதுவாகவே உணவின் மீது அதிக கவனம் செலுத்துவது வழக்கம். கண்டிப்பாக எங்களின் உணவில் ஏதாவது ஒரு சிறுதானிய வகை உணவு அன்றாடம் இருக்கும். நாங்க செய்வதைப் பார்த்து எங்க உறவினர்கள், நண்பர்கள் பலர் அதற்கான செய்முறை கேட்டு தெரிந்து கொள்வார்கள். அப்போதுதான் என் கணவர், இதையே ஒரு பிசினஸாக செய்தால் என்ன என்று கேட்டார்.
எனக்கும் சமைப்பது பிடித்தமான விஷயம் என்பதால், சரின்னு சொல்லிட்டேன். அந்த சமயம் கோவிட் என்பதால் அந்தக் காலத்தில் என்ன உணவினை எப்படி கொடுக்கலாம் என்று திட்டமிட்டு, கொரோனா நிறைவடைந்த பிறகு தொடங்கப்பட்டதுதான் அமிழ்தம் உணவகம்’’ என்றவர், ஆரம்பத்தில் தன் உணவினை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
‘‘நான் மிகவும் ஆர்வத்துடன் உணவகத்தை ஆரம்பித்தேன். ஆனால், மக்களிடம் இருந்து ஜீரோ சதவிகிதம்தான் வரவேற்பு இருந்தது. காரணம், பொதுவாகவே ஆரோக்கியமான மற்றும் சிறுதானியங்கள் நிறைந்த உணவுகளை நோயாளிகள், வயதானவர்கள் சாப்பிடக்கூடிய உணவாகத்தான் பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதனை நாம் அன்றாடம் சாப்பிடலாம் என்று பலருக்கும் தெரியவில்லை. அதேசமயம் சிறுதானியம் மற்றும் பாரம்பரிய அரிசிகள் போன்ற உணவுகளைப் பற்றி தெரிந்தவர்கள், அதன் மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கியத்தினை அறிந்தவர்கள்தான் எங்க உணவகத்திற்கு வந்தார்கள். ஒருமுறை வந்தவர்கள் தொடர்ந்து வரவும் செய்தார்கள்.
அவர்கள்தான் எங்க உணவகம் குறித்து மார்க்ெகட்டிங்கும் செய்தார்கள்னு சொல்லணும். காரணம், ஒரு உணவின் சுவை நன்றாக இருந்தால், கண்டிப்பாக நாம் மட்டுமில்லாமல், நமக்கு தெரிந்தவர்களிடம் அங்கு போய் சாப்பிடச் சொல்லி பரிந்துரைப்போம். அவர்கள் மூலம் வாய்வார்த்தையாக ெசால்லித்தான் பலர் எங்க உணவகத்தினை தேடி வந்தார்கள்.
இப்போது சிறுதானியம், பாரம்பரிய அரிசி குறித்து பலருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் நாம் உணவகம் என்ற தொழிலில் ஈடுபடும் போது, போட்டி நிறைந்த இந்த துறையில் மக்களிடம் வித்தியாசமான உணவினை கொண்டு சென்றால்தான் அவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். அதனால் தூயமல்லி அரிசி ரகத்தில் முழு மீல்சினை மதிய உணவாக கொடுத்தோம். மேலும் கைக்குத்தல் அரிசி, மாப்பிள்ளை சம்பா போன்ற பல்வேறு அரிசிகளிலும் மதிய உணவினை தயார் செய்தேன். ஆனால் பலர் தூயமல்லி அரிசி சோறுக்குதான்ஆதரவு தந்ததால், மதிய உணவான முழு மீல்சுக்கு தூயமல்லி அரிசிச் சோறுதான் தொடர்ந்து தருகிறேன். மாலை நேரத்தில் சிறுதானிய வகைகளில் டிபன் உணவுகளை வழங்கி வருகிறோம்’’ என்றவர், தன் உணவகத்தில் உள்ள சிறப்பு உணவுகள் குறித்து விவரித்தார்.
‘‘எங்க உணவகத்தில் சிக்னேச்சர் உணவுகள் பல உள்ளன. அதில் அனைவரும் விரும்பி சாப்பிடுவது வாழைப்பூ வறுவல். பொதுவாக குழந்தைகள் வாழைப்பூவினை சாப்பிட மாட்டார்கள். அதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதனால் அதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் வறுவல் முறையில் கொடுக்கிறோம். குதிரை வாலிப் பொங்கல், சாமை சாம்பார் சாதம், மாப்பிள்ளை சம்பா – கருப்பு உளுந்து இட்லி போன்றவைகள் எங்கள் உணவகத்தின் சிறப்பான உணவுகளாக இருக்கின்றன.
என்னுடைய உணவுகள் அனைத்தும் நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய வழக்கமான உணவுகள் இல்லை. அதனாலேயே நான் பல சவால்களை சந்திக்க நேர்ந்தது. ஆரம்பத்தில் மக்களிடம் இது போன்ற உணவுகளை கொண்டு செல்வதே கடினமாக இருந்தது. எங்களின் உணவினை விரும்பிய வாடிக்கையாளர்கள் மூலம் தான் மக்கள் வரவே ஆரம்பித்தார்கள். மேலும் வாடிக்கையாளர்களை நாம் நிலைக்க வைக்க நம்முடைய உணவில் தரம் மற்றும் சுவையில் எந்தவித மாற்றமும் இருக்கக்கூடாது. அதற்கு இந்த உணவுகள் குறித்து எங்க ஊழியர்களுக்கு தெரிய வேண்டும். அவர்களுக்கு இந்த உணவின் மகத்துவம் மற்றும் மருத்துவப் பயன்கள் குறித்து தெளிவுபடுத்தினோம். புதிதாக ஒரு வாடிக்கையாளர் ஓர் உணவினை ஆர்டர் செய்யும் போது, அந்த உணவைப் பற்றி மட்டுமில்லாமல் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் அவர்கள் தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு மூட்டுவலி பிரச்னைக்கு முடக்கத்தான் சூப். இருமல், சளி போன்றவற்றுக்கு தூதுவளை சூப் என்று அவர்களே வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரை செய்யும் அளவிற்கு நாங்க பயிற்சி கொடுத்திருக்கிறோம்.
நாங்க பெரியவர்களை மட்டுமில்லை இளம் தலைமுறையினரையும் டார்கெட் செய்கிறோம். அதனால் பருத்திப்பால், பனங்கற்கண்டு பொங்கல், வாழைப்பூ, ஆவாரம் பூ தோசை என்றிருந்தாலும், இளம் தலைமுறைக்கென சிறுதானிய நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், வரகு மிக்சர், சாமை அதிரசம், சிறுதானிய உருண்டைகள், முருங்கைக்காய் கோலா உருண்டை என அனைத்தும் இங்குள்ளது. மேலும் உடல் சூட்டை தணிக்கும் பானகம், உளுத்தங்களியும் விற்பனை செய்கிறோம்.
துரித மற்றும் நச்சு நிறைந்த உணவினைதான் இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்புகிறார்கள். நம் உடலுக்கு ஏற்ற உணவு எது என்பதை அறிந்து உண்டால்தான் பிற்காலத்தில் நமக்கு நன்மை கிடைக்கும். இப்போது இவர்கள் விரும்பிச் சாப்பிடும் துரித உணவுகளின் தயாரிப்பு முறைகளை அறிந்தால் அவர்கள் அதை தொடக்கூட மாட்டார்கள். வெள்ளைச் சர்க்கரை, சோடா உப்பு, மைதா, அஜினோமோட்டோ போன்ற எதுவும் எங்கள் உணவகத்தில் சேர்க்கப்படுவதில்லை. இங்கு சாப்பிட வருபவர்கள் கூறுவது ஒன்றுதான், ‘மதிய உணவு இங்கு சாப்பிட்டால், மாலையில் பசியினை உணர முடிகிறது’ என்பதுதான்.
நல்ல உணவை சாப்பிட்டு, அவை நன்றாகச் செரித்தால்தான் பசி உணர்வு ஏற்படும். துரித உணவுகள் உடல் பருமன், குழந்தையின்மை, புற்றுநோய் என நாம் எதிர்பார்க்காத பல உடல் உபாதைகளை கொண்டு வந்து சேர்க்கும். நான் பயமுறுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. கண்டிப்பாக பின்விளைவுகளை எதிர்காலத்தில் சந்திப்பீர்கள். வீட்டில் ஆரோக்கிய உணவினை சமைத்து சாப்பிடுங்கள். இல்லை என்றால் நல்ல உணவுகளை தேடிச் சாப்பிடுங்கள்’’ என்றார்.
தொகுப்பு: ஜெனிபர் டேனியல்