புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகள் எப்போது மீட்கப்படும் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ரந்தீப் சுர்ஜிவாலா டிவிட்டரில் பதிவிடுகையில்,சீனாவுடன் இந்திய ராணுவ அதிகாரிகள் நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாகவும்,சாதகமாகவும் இருந்தது. கிழக்கு லடாக்கின் எல்லைக் கோட்டை ஒட்டி உள்ள பகுதியில் நீடிக்கும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரச்னைக்குரிய பகுதிகளில் படைகளை திரும்ப பெறுவது பற்றி இதில், எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 2020 ஏப்ரலுக்கு முன்பு இருந்த நிலைமை 3 ஆண்டுகள், 3 மாதம் ஆகியும் இன்னும் திரும்பவில்லை. டெப்சாங் சமவெளியில் உள்ள 65 ரோந்து முனைகளில் 26 இடங்களை இந்திய ராணுவம் கண்காணிப்பு செய்ய முடியவில்லை. நமது நாட்டுக்குள் உள்ள ‘ஒய்’ஜங்சன் என்ற இடத்துக்குள் செல்லும் இந்திய வீரர்களை சீன ராணுவம் தடுக்கிறது. சீன ராணுவம் கைப்பற்றி உள்ள இந்திய பகுதிகள் எப்போது விடுவிக்கப்படும்?.
சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 1000 சதுர கிமீ பகுதியை விட்டு கொடுப்பதற்காக இணக்கமான நிலையை பாஜ அரசு உருவாக்குகிறதா? 2020ம் ஆண்டு நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பேசியதை போல், இந்திய பகுதிக்குள் யாரும் நுழையவில்லை என்று தொடர்ந்து பிரதமர் மோடி கூறுகிறாரா? சீனா ஆக்கிரமிப்பு செய்யவில்லை எனில் எதற்காக பேச்சுவார்த்தை நடக்கிறது. சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக இந்திய ராணுவ தளபதி கூறியது தவறா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.