பிரிஸ்பேன்: இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட உடன்பாட்டை தொடர்ந்து கிழக்கு லடாக்கின் டெம்சோக், டெப்சாங் ஆகிய பகுதிகளில் இருந்து இருநாட்டு வீரர்களும் திரும்ப பெறப்பட்டனர். இதையடுத்து டெம்சோக் பகுதியில் நேற்று முன்தினம் இந்திய ராணுவம் வழக்கமான ரோந்து பணியை ஆரம்பித்தது. இதேபோல் டெப்சாங் பகுதியில் நேற்று முதல் இந்திய ராணுவம் ரோந்து பணியை தொடங்கி உள்ளது.
இதனிடையே ஆஸ்திரேலியா வில் சுற்றுப்பய ணம் மேற்கொண்டுள்ள ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகையில், “2020ம் ஆண்டுக்கு பிறகு உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அதிக எண்ணிக்கையில் சீன துருப்புகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவும் அதிக வீரர்களை நிறுத்தியது. இதனால் இருதரப்பு உறவுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. 4 ஆண்டுகால பிரச்னைக்கு தற்போது முடிவு எட்டப்பட்டு படைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதனால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை” என்றார்.