செய்யூர்: சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி வரையில் சாலை விரிவாக்க பணி கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் உள்ள பல பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை குடியிருப்புகள் மற்றும் கடை அகற்றப்பட்டு வந்த நிலையில், வெண்ணாங்குப்பட்டு பகுதியில் உள்ள கடைகளை அகற்ற பணியாளர்கள் நேற்று வந்திருந்தனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய இடைக்கழிநாடு அனைத்து வணிகர் நல சங்கத்தினர் உரிய இழப்பீடு வழங்காமல் கடைகளை இடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, இடைக்கழிநாடு அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மாவட்ட தலைவர் பிரபாகரன் கண்டன உரையாற்றினார்.
நிகழ்வில் கவுரவ தலைவர் இனியரசு, மாவட்ட இணை செயலாளர் ராஜா, தொகுதி செயலாளர் சசிகுமார், பொருளாளர் வெங்கடேசன், ஆலோசகர்கள் ஏழுமலை, தட்சிணாமூர்த்தி, கடப்பாக்கம் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் தலைவர் வடிவேல், செயலாளர் ரவி, பொருளாளர் சிவகுமார் மற்றும் வியாபாரிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.