Friday, February 23, 2024
Home » மண் மணக்கும் தின்பண்டங்கள்!

மண் மணக்கும் தின்பண்டங்கள்!

by Lavanya

இது கிராமத்து ஸ்பெஷல்

கிராமத்தில் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் தேவையான தின்பண்டங்களை கடையிலிருந்து வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே செய்து உண்ணும் வழக்கம் காணப்பட்டது. இப்போது அந்தப் பழக்கம் மெல்ல மெல்ல மாறி வருகிறது.
கிராமத்தில் தங்களின் வயல்களில் விளையும் தானியங்களைக் கொண்டு தின்பண்டங்களைத் தயாரித்தனர்.

சோளப்பொரி

இன்று கடைகளில் விற்கும் பாப்கார்ன் வேறு, இந்த சோளப் பொரி வேறு. மானாவாரி நிலங்களில் கம்பு விதைக்கும்போது வரப்புகளைச் சுற்றி சோளம் விதைப்பதுண்டு. வளர்ந்து வரும் சோளத் தட்டைகளை விளைவதற்கு முன்பே மாட்டுக்குத் தீவனமாகச் சிலர் கொடுப்பதுண்டு. ஒருசிலர் சோளத்தை விளைவித்து உணவுப் பொருளாகப் பயன்படுத்துவதுண்டு. இதனைக் காக்காச் சோளம், வெஞ்சாமரைச் சோளம் என்று குறிப்பிடுவர். இந்தச் சோளத்தில் உப்புநீர் தெளித்து, வறவோட்டில் பொரித்து குழந்தைகளுக்கு உண்பதற்குக் கொடுக்கின்றனர். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஏற்றதாகும். ஏனெனில் பொரிக்கும்போது சோளத்தின் மேலுறை வெடிப்பதால் உள்ளே இருக்கும் மாவுப் பொருளிலுள்ள ரசாயனப் பொருள்கள் சிறுசிறு துகள்களாகி சீரணத்திற்கு ஏற்றதாகிறது. அவ்வாறு இருந்தாலும் பொரிப்பதற்காக மிகையான சூட்டில் சோளம் வறுபடும்போது அதிலுள்ள புரதத்தில் காணும் முக்கிய அமினோ அமிலப் பொருளான லைசின் வீணாகி விடுவதாக உணவியல் அறிஞர்கள்
குறிப்பிடுகின்றனர்.

அவித்த துவரங்காய்

உளுந்து பயிரிடும்போது ஊடுபயிராகத் துவரையைப் பட்டம் போட்டு விதைப்பர். உளுந்து அறுவடையான பின் துவரை காய்க்கத் தொடங்கும். துவரங்காயைப் பறித்து வந்து அவித்து உண்பர். சிறுவர்களுக்கு விருப்பமானபடி அவித்தத் துவரையை உரித்துப் பருப்புடன் வெல்லம் கலந்து பிசைந்தும் கொடுப்பர். வயலுக்குச் செல்லும் சிறுவர்கள் பச்சையாகத் துவரங்காயைப் பறித்து உண்பதும் உண்டு.எள்ளுப்புட்டுஎள்ளை வறுத்து உரலில் இட்டு இடித்து வெல்லம் கலந்து கொடுப்பர். இதனைக் குழந்தைகள் விரும்பி உண்பர். எள் இடிக்கும்போது அக்கம் பக்கத்து வீடுகளுக்கெல்லாம் மணம் பரவும். இதனைப் பற்றிய நாட்டுப்புறக் கதை ஒன்று உண்டு. வறுத்த எள்ளை வெல்லப் பாகு கலந்து எள்ளுருண்டையாகப் பிடித்தும் ஒரு சிலர் கொடுப்பர்.

கம்மம்புட்டு

கம்பை வறுத்து அரைத்து ஆவியில் வேகவைத்து சிறுவர்களுக்கு வெல்லம் கலந்து கொடுப்பர். பெரியவர்கள் மிளகாய், வெங்காயம் கலந்து தாளித்து
உண்பர்.

உளுந்துருண்டை

உளுந்தை வறுத்து இடித்து வெல்லம் கலந்து உண்ணக் கொடுக்கின்றனர். இதனைச் சிறுவர்கள் விரும்பி உண்பர். உளுந்தில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, பி விட்டமின்கள் ஆகிய
சத்துகள் நிறைந்துள்ளன.

நீர் உருண்டை

அரிசி மாவைப் பிசைந்து அதிலுள்ள அதிகப்படியான நீரை மெல்லிய துணியில் வேடுகட்டி உறியச் செய்து அந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அவற்றை ஆவியில் வேகவைத்துத் தாளித்து உண்பர். இதனைச் சில வீடுகளில் செய்வதற்குக் குறிப்பாகக் காரணம் உண்டு. நாட்டுப்புறப் பெண்களிடம் செவ்வாய்ப் பிள்ளையார் வழிபடும் வழக்கம் உண்டு. இதனைத் தென்மாவட்டங்களில் அவ்வை நோன்பு எனக் குறிப்பிடுவர். அன்று அரிசி மாவினாலான உப்பில்லாத ஒருவகைக் கொழுக்கட்டை செய்து படைத்து உண்பது வழக்கம். அதனை ஆண்கள் பார்க்கவும் கூடாது, உண்ணவும் கூடாது. அப்படிப் படைப்பவர் வீட்டில் ஆண் குழந்தை இருக்குமானால் அவனுக்குக் கொடுக்காமல் தாய் மட்டும் உண்பது தாய்மனசுக்கு ஒவ்வாது. எனவே, படையலுக்கு மறுநாள் நீர் உருண்டை செய்து கொடுப்பார்கள்.

நத்தை வறுவல்

நத்தையை அவித்து ஓட்டை நீக்கிவிட்டு தசைப்பகுதியை மீன் வறுப்பதுபோல் உப்பு, காரம் சேர்த்து வறுத்துக் கொடுக்க அதனைச் சிறுவர்கள் விரும்பி உண்பார்கள். சிறுவர்களுக்குக் கொடுப்பதால் மலச்சிக்கல் நீங்கும் என்று நம்புகின்றனர். பதார்த்த குணபாடத்திலும் நத்தைக்கறி மலக்குடல் நோய்களை நீக்கும் தன்மையுடையது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொரியரிசிக் களி

அரிசியைப் பொரித்து அரைத்து வெல்லம் கலந்து களியாகக் கிண்டி சிறுவர்களோடு பெரியவர்களும் உண்பார்கள். குறிப்பாகச் சிறுவர்களே அதிகம் விரும்பி உண்பர்.திரட்டுப்பால்
சிறுவர்களுக்குப் பிடித்த இனிப்பு வகைகளில் இது குறிப்பிடத்தக்கது. தேங்காய்ப்பூ, பச்சரிசி, வெல்லம் மூன்றை மட்டுமே கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை உணவு. இது மிகுந்த சுவையுடன் அமைந்திருக்கும். வெண்ணெய்ப் புட்டு கடலைமாவும், அரிசிமாவும் கலந்து செய்யப்படும் ஒருவகைப் புட்டு இது. இதில் வெல்லம் கலந்து சிறுவர்களுக்குக் கொடுப்பதுண்டு. இவ்வாறு நாட்டுப்புறங்களில் விளையக்கூடிய சோளம், துவரை, எள், கம்பு, அரிசி, தேங்காய் போன்றவற்றின் மூலமும் வயல்வெளிகளில் கிடைக்கும் நத்தை போன்ற உயிரினங்களைக் கொண்டும் சிறுவர்களுக்கு உணவு தயார் செய்து கொடுப்பது வட்டார மரபு சார்ந்த முறையாகும். எளிமையான உணவு வகைகளாக இருப்பினும் இவை அனைத்தும் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் கிடைக்கும்படியாக உள்ளனவாகும்.இதுபோன்று உள்ளூரில் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு சிறுவர்களுக்குச் சிற்றுண்டி செய்து கொடுக்கும் முறை தற்காலத்தில் அருகி வருகிறது.

– இரத்தின புகழேந்தி.

You may also like

Leave a Comment

one + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi