சென்னை: விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டுகளில் சந்திரயான் 3, ஆதித்யா எல் 1 ஆகிய விண்வெளி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது. மேலும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.
இதன்தொடர்ச்சியாக செயற்கைக்கோள்களை ஒன்றிணைக்கும் தொழில்நுட்பமான ஸ்பேஸ் டாக்கிங்யை செயல்படுத்த கடந்த ஆண்டு ராக்கெட் ஏவியது. மேலும் கடந்த டிசம்பர் 16ம் தேதி ஸ்பேஸ் டாக்கிங் சோதனையை வெற்றிகரமாக செயல்படுத்தியது. இதன் மூலம் ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பம் கொண்ட 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதுபோன்ற பெரிய திட்டங்களை ஒரு பக்கம் செயல்படுத்தினாலும் ராணுவ பாதுகாப்பு, போக்குவரத்து வழிகாட்டுதல், வானிலை ஆராய்ச்சி, புவி கண்காணிப்பு ஆகிய பணிகளுக்காக செயற்கைக்கோள்களை இஸ்ரோ ஏவி வருகிறது. இந்நிலையில் எல்லை பாதுகாப்பு விவசாயம், பேரிடர் மேலாண்மை, நீர்வளம், மீன்வளம், காடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட தொலைஉணர்வு பயன்பாட்டுக்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் என பல்வேறு செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக இஸ்ரோ வடிவமைத்துள்ள இஓஎஸ்-09 (ரிசாட்-1பி) எனும் அதிநவீன செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் செலுத்த திட்டமிட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இதுவரை 100 ராக்கெட் ஏவுதல்களை மேற்கொண்டுள்ளது, தனது 100 வது ராக்கெட்டை கடந்த டிச.30ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. அதைத்தொடர்ந்து 5 மாதங்கள் இடைவெளிக்கு பின் நேற்று தனது 101வது ராக்கெட்டை செலுத்த திட்டமிடப்பட்டு ராக்கெட்டு ஏவுதலுக்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். கடந்த 16ம் தேதி ராக்கெட் ஏவுதளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து செயற்கைக்கோள் பொருத்தும் பணி, எரிபொருள் நிரப்புதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ராக்கெட் ஏவுதலுக்கான 22 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் காலை 7.59 மணிக்கு தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று காலை 5.59 மணிக்கு ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி61 ராக்கெட் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த ராக்கெட் ஏவுதல் 4 கட்டங்களாக பிரித்து இஒஎஸ் 09 செயற்கைக்கோளை சூரிய துருவ சுற்றுப்பாதை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டது. முதல் கட்டத்தில் பிரதான இன்ஜினுடன் 6 சிறிய ரக இன்ஜின் திட எரிப்பொருளுடனும், 2 வது கட்டத்தில் திரவ எரிப்பொருள் இன்ஜினும், 3வது கட்டத்தில் திட எரிபொருள் இன்ஜினும், 4வது கட்டத்தில் திரவ எரிபொருள் இன்ஜினும் பொருத்தப்பட்டிருந்தது. இந்த 4 கட்டங்களை தொடர்ந்து இறுதிகட்டமாக ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று காலை சரியாக 5.59மணிக்கு பிஎஸ்எல்வி சி61 ராக்கெட் புறப்பட்டது. அதனை தொடர்ந்து முதல் 2 கட்ட செயல்பாடுகள் சரியாக இருந்தது. இந்நிலையில் 3வது கட்டத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக இத் திட்டம் பின்னடைவை சந்தித்தது.
இந்த திட்டம் தோல்வியடைந்தது குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது: பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் ஏவப்பட்டு 2 கட்டங்கள் வெற்றியடைந்த நிலையில் 3வது கட்டமான திட எரிபொருள் அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. மோட்டார் அழுத்ததில் சரியான செயல்பாடுகள் இல்லாமல் போனது. இதனால் ராக்கெட் அதன் இலக்கை அடையாமல் தோல்வியடைந்தது. இது குறித்து முழுமையாக ஆய்வு மற்றும் விசாரணையை மேற்கொண்டு நாங்கள் மீண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி எண்ணிக்கை குறைவு….
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இதுவரை செயல்படுத்திய திட்டங்களில் 9ல் மட்டுமே ராக்கெட் ஏவுதலின்போது தோல்வி அடைந்துள்ளது. இது 10வது திட்டம். மேலும் 3 திட்டங்கள் மட்டுமே செயற்கைக்கோள் நிலைநிறுத்திய பின் தோல்வியடைந்துள்ளது. கடந்த 1990ம் ஆண்டு முதல் பிஎஸ்எல்வி ராக்கெட்கள் ஏவப்படுகிறது. பிஎஸ்எல்வி ராக்கெட்டின் தோல்வி எண்ணிக்கை குறைவு என்று கூறப்படுகிறது. இதுவரை 2 திட்டங்கள் மட்டுமே தோல்வியடைந்த நிலையில் நேற்றைய தினம் மூன்றாவதாக பிஎஸ்எல்வி சி61 திட்டம் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.