நாகர்கோவில்: ஆவணி 3வது ஞாயிற்றுக்கிழமையான இன்று நாகர்கோவில் நாகராஜா கோயிலில் பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர். அதிகாலையிலேயே நீண்ட கியூவில் நின்று தரிசனம் செய்தனர். நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று ஆவணி 3 வது ஞாயிற்றுக்கிழமையொட்டி அதிகாலையிலேயே பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர். நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்து.
காலை 8 மணியளவில் நாகராஜா கோயில் தெற்கு வாசலுக்கு வெளியே நீண்ட வரிசை நின்றது. பின்னர் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து தலைமை தபால் நிலைய சந்திப்பு வரை வரிசையில் நின்றனர். ரூ.400க்கு சிறப்பு தரிசன டிக்கெட்டில் சென்றவர்களுக்கு 1 லிட்டர் பால் பாயாசம் சில்வர் பாத்திரத்தில் வழங்கப்பட்டது. மேலும் கோயில் பிரசாதம், தேங்காய், பழம் உள்ளிட்டவையும் வழங்கினர். ரூ.150 கட்டணத்தில் ஒரு லிட்டர் பால் பாயாசம் (தனி கவரில்) மட்டும் வழங்கப்பட்டது. பக்தர்கள் அதிகளவில் வந்ததை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
கடந்த இரு நாட்களாக, நாகர்கோவில் நகரில் காலையில் மழை பெய்தது. இன்று அதிகாலையில் லேசான சாரல் இருந்தது. அதன் பின்னர் மழை இல்லை. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் இருந்ததுடன், வெயிலும் இல்லாததால் பக்தர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். நாகர் சிலைகளுக்கு மஞ்சள், பால் ஊற்றுவதற்காகவே 2 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தனர். கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. மதியம் அன்னதானமும் நடைபெற்றது. பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். மருத்துவ குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.