*உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு
ஊட்டி : மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், பச்சைநிற கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கும் புல்வெளிகள், வனப்பகுதிகள், எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள், நீர் வீழ்ச்சிகள், அணைகள் மற்றும் காய்கறி தோட்டங்கள் உள்ளன. இங்கு ஆண்டு முழுவதும் நிலவக்கூடிய இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை புரிகின்றனர்.
ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை சீசன் சமயமான ஏப்ரல், மே மாதங்களில் சமவெளி பகுதிகள், அண்டை மாநிலங்களில் கொளுத்தும் கொடை வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இச்சமயங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியை நோக்கி படையெடுப்பார்கள்.
லட்சக்கணக்கில் குவியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு போட்டி, பழக்கண்காட்சி உள்ளிட்ட கோடை விழா நிகழ்ச்சிகள் மே மாதத்தில் நடத்தப்படுகிறது. இதுதவிர தனியார் சார்பில் நாய் கண்காட்சி உள்ளிட்டவைகளும் நடத்தப்படுகின்றன. ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் தங்கிச்செல்ல வசதியாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நட்சத்திர ஓட்டல்கள், லாட்ஜ்கள், காட்டேஜ்கள் ஏராளமானவை உள்ளன.
இதுமட்டுமின்றி சாலையோர வியாபாரிகள், வாடகை வாகன ஓட்டுநர்கள், உணவகங்கள், உள்ளூர் தயாரிப்புகளான நீலகிரி தைலம், வர்க்கி, சாக்லேட் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு சுற்றுலா தொழிலேயே வாழ்வாதாரமாக உள்ளது. குறிப்பாக கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா தொழிலில் ஈட்டும் வருவாயை கொண்டு உள்ளூர் மக்கள் ஆண்டு முழுவதும் பிழைப்பு நடத்துகின்றனர்.
இதனால் முன்கூட்டியே கோடை சீசனுக்காக பொருட்களை வாங்கி இருப்பு வைத்து விற்பனை செய்து வருவாய் ஈட்டுவார்கள். இதனால் ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்த சூழலில் உயர்நீதிமன்ற உத்தரவு படி ஏப்ரல் 1ம் தேதி முதல் கடைபிடிக்கப்படும் இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டு இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் வழக்கமான வியாபாரம் இல்லாமல் ‘டல்’ அடிக்கிறது. இந்த சூழலில் கேரளாவில் ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும். அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் முதல் வாரத்தில் இருந்து துவங்கும். அதற்குள் சீசனும் முடிந்து விடும் என்பதால் பெரிய அளவில் வியாபாரத்தில் பாதிப்பு இருக்காது.
இம்முறை முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை கடந்த 24ம் தேதியே துவங்கி நீலகிரியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. குறிப்பாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் 4 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டன.
அண்டை மாநில எல்லையோர மாவட்டங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வெகுவாக குறைந்தது. இதனால் இறுதிக்கட்டத்தில் கோடை சீசன் களையிழந்தது.
இதன் காரணமாக உள்ளூர் வியாபாரிகள், வாடகை வாகனங்கள் வைத்துள்ளவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இந்த சூழலில் நேற்று மழையின்றி இதமான காலநிலை நிலவிய நிலையில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமான சுற்றுலா தொழிலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.