Sunday, February 25, 2024
Home » திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

by MuthuKumar

திருவள்ளூர்: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று முதல் பரவலாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் மழை நீடித்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாய பணிகளும் ஜரூராக நடந்து வருகிறது.

திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் இருந்து வருகிறது. இந்த நீர்தேக்கத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் மற்றும் மழை நீராகும். மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் மழையால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. அதன்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், 3,073 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியில் தற்போது நீர்மட்டம் 34.77 அடியாக உள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 190 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பேபி கால்வாய் மூலம் 13 கனஅடியும், உபரி நீர் 50 கனஅடி கொசஸ்தலை ஆற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கனஅடியில், 784 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 97 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 16 கன அடியாகவும் உள்ளது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில், 2,918 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 258 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 189 கன அடியாகவும் உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில், 497 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 10 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 10 கன அடியாகவும் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில், 3,132 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 497 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 150 கனஅடியாகவும் உள்ளது. தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பும் கணிசமாக உயரும் என்பதால் உபரிநீர் திறப்பும் அதிகரிக்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத்தில் பெய்த மழையளவு (மிமீ) விவரம்: பொன்னேரி- 81, பள்ளிப்பட்டு- 5, கும்மிடிப்பூண்டி- 22, ஆர்.கே.பேட்டை- 10, சோழவரம்- 29, செங்குன்றம்- 31, ஜமீன் கொரட்டூர்- 23, பூந்தமல்லி- 23, திருவாலங்காடு- 16, திருத்தணி- 17, பூண்டி- 20, தாமரைப்பாக்கம்- 26, திருவள்ளூர்- 36, ஊத்துக்கோட்டை- 10, ஆவடி- 55. மொத்தம் 40.4 செ.மீ. மழையும் சராசரியாக 2.69 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முதல் பரவலாக மழை பெய்கிறது. மாவட்டத்தில் செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு, வண்டலூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களில் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுப்பணி துறைக்கு சொந்தமான 528 ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் பெரிய ஏரிகளான பொன்விளைந்தகளத்தூர், கொளவாய், கொண்டங்கி, மானாம்பதி, பாலூர், நந்திவரம் கூடுவாஞ்சேரி, அணைக்கட்டு, கடப்பேரி உள்ளிட்டவை வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் முக்கிய பகுதிகளான செங்கல்பட்டு, தாம்பரம், மேடவாக்கம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாயில் தண்ணீர் நிரம்பி வருகிறது. தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் புறநகர் பஸ் நிலையம் எதிரே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது.

அவற்றை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சிங்கபெருமாள் கோயில் அருகே ஜிஎஸ்டி சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. கடலோர பகுதிகளான கோவளம், மாமல்லபுரம், வடப்பட்டினம், தென்பட்டினம், கடப்பாக்கம், கல்பாக்கம், கானத்தூர் ஆகிய 35 மீனவ கிராமங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக பள்ளிகள், சமுதாய கூடம் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளது. மாவட்ட வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணி துறை அதிகாரிகள் தொடர்ந்து நீர்நிலைகளை கண்காணித்து வருகின்றனர். பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ள சிறிய ஏரிகள் முழுவதுமாக நிரம்பி வருகிறது. ஏரிகள் உடையாமல் தடுப்பதற்காக மணல் மூட்டைகளும் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு (மிமீ) விவரம்: செங்கல்பட்டு- 71.20, திருப்போரூர்- 58, கேளம்பாக்கம்- 76.60, திருக்கழுக்குன்றம்- 86.50, மாமல்லபுரம்- 122, மதுராந்தகம்- 97, செய்யூர்-98, தாம்பரம்-11.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, மாவட்ட கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையம், ஒலி முகமது பேட்டை, பாலுச்செட்டிசத்திரம், தாமல், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, திம்மசமுத்திரம், புஞ்சை அரசன்தாங்கல், அய்யங்கார்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் உத்திரமேரூர், வாலாஜாபாத், பெரும்புதூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. காஞ்சிபுரத்தில் பல்லவர் மேடு, அருந்ததி பாளையத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முதல் விடிய விடிய பரவலாக அதிகளவில் மழை பெய்து வருவதால் மக்கள் அவதிக்குள்ளானார்கள். அதே நேரத்தில் உத்திரமேரூர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விவசாய பணிகளும் தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீ) விவரம்: காஞ்சிபுரம்- 34.6, உத்திரமேரூர்- 65, வாலாஜாபாத்- 51.4,பெரும்புதூர்- 31.6, குன்றத்தூர்- 55.4, செம்பரம்பாக்கம்-46.6.

You may also like

Leave a Comment

thirteen + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi