ஏராளமான வண்ணங்கள் நிறைந்த பாலிமர் அல்லது பிவிசி கிளே. இதில் குட்டிக் குட்டிக் காதணிகள் துவங்கி ஏராளமான நகைகள், பொம்மைகள், கீ-செயின்கள் என பல கைவினைப் பொருட்கள் செய்வதுண்டு. ஆனால் இந்தக் கிளேவைக் கொண்டு அனிதா பாஸ்கர் உருவாக்கும் காதணிகள் இன்னும் பெரிதாகவும், வண்ணமயமாக தனித்துவமாகவும் இருக்கின்றன. மேலும் இவரின் காதணி களில் ஆரம்ப விலையே 1000களில் உள்ளன. தன்னைப் பற்றியும் தனது காதணிகள் குறித்தும் பகிர்ந்தார் அனிதா.
‘எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர், ஆனால் இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சொந்தக்காரியாக வளர்ந்திருக்கேன் என சொல்லலாம். பிஸினஸில் மாஸ்டர்ஸ் முடிச்சிருக்கேன். ஒரு தனியார் கம்பெனியிலும் கூட சில காலம் வேலை செய்தேன். சின்ன வயதில் இருந்தே மனதுக்குப் பிடித்ததை செய் எனச் சொல்லும் குடும்பம் என்பதாலேயே தடைகளின்றி நிறைய விஷயங்கள் கத்துக்க முடிஞ்சது. அப்பா பாஸ்கரன், ஸ்டாக் மார்கெட்டிங் பிஸினஸில் இருக்கிறார். அம்மா நிர்மலா இரயில்வேஸ்ல வேலை செய்திட்டு, இப்போ ஹவுஸ் ஒயிஃப். 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு, பெரும்பாலும் வீட்டிலேயே இருந்த நேரம். என்ன செய்யறதுன்னு தெரியலை, மேலும் பிஸினஸ் ஐடியா எல்லாம் கிடையாது. ஆனால் எதோ ஒண்ணு கத்துக்கணும், புதுசா எதாவது தெரிஞ்சுக்கணும் என்கிற ஆர்வம் நிறைய இருந்துச்சு. இந்த பாலிமர் கிளே கிராஃப்ட் பற்றி நிறைய வீடியோக்கள், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் இப்படிப் பார்த்தபோதுதான் ஆர்வம் வந்தது’ என்னும் அனிதா பாஸ்கரன் எப்படி இந்த கிளே காதணிகளை பிஸினஸா மாற்றினார் எனத் தொடர்ந்தார்.
‘ஆரம்பத்திலே நான் இதை பிஸினஸ் அப்படின்னு எல்லாம் பார்க்கலை, சில வீடியோக்களை பார்த்துக் கத்துக்கத் துவங்கினேன். அப்பறம் அட்வான்ஸ் பயிற்சிகளும் எடுத்துக்கிட்டேன். வீடியோக்களில் பார்த்தபோது ரொம்ப கஷ்டமா தெரிஞ்சது. ஆனால் கத்துக்கிட்டதுக்கப்பறம் எனக்கான விஷயமா நெருக்கமா இருந்துச்சு. மேலும் எப்போதுமான டிசைன்களா இல்லாம பளிச்ன்னு, அதே சமயம் வித்யாசமான லுக் கொடுக்கணும்னு நினைச்சு ஒவ்வொரு காதணிகளையும் செய்ய ஆரம்பிச்சேன்’ என்னும் அனிதா பாஸ்கரன் இயற்கையைத்தான் தனது காதணிகளுக்கான அடிப்படையாக எடுத்துக்கொண்டிருக்கிறார்.
‘பொதுவாகவே கடவுள் படைப்பில் இயற்கை நமக்குக் கொடுத்திருக்கற அன்பளிப்பு ஏராளம். அதிலும் இன்னமும் புரியாத புதிர் இந்த வண்ணமயமான மலர்கள். ஒரே நாளில் பூத்து, பலருடைய கண்களுக்கு விருந்தாகி, மகிழ்ச்சியாக்கி தன்னுடைய வாழ்நாளை அப்படியே அடுத்து காய், கனி, விதை இப்படி மாற்றிக்கும். அந்தப் பூக்களைத்தான் நான் என்னுடைய காதணிகளுக்கு இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டேன். எங்கே போனாலும் வித்யாசமான மலர்களைப் பார்த்தாலே உடனே புகைப்படம் எடுத்துப்பேன். அதை என்னுடைய காதணிகளில் கொண்டுவருவேன்’ எதனால் தனது காதணிகளின் விலை அதிகம் என மேலும் பகிர்ந்தார் அனிதா.
‘ரொம்ப மெனெக்கெடாமல் நான் பார்க்க நல்லா தெரியணும்ன்னு யோசிக்கற பெண்கள் அதிகரிச்சிட்டாங்க. காரணம் இன்னைக்கு நேரம் ரொம்ப முக்கியமா இருக்கு. அதனாலேயே வசதியா, உடனே போட்டுக்கிட்டு கிளம்பணும்னு யோசிக்கிறாங்க. அதுக்கேத்த மாதிரி இந்த காதணிகள் ஒண்ணு போட்டுக்கிட்டாலே போதும், வேற எந்த நகைகளோ, கழுத்துக்கு செயின்களோ தேவைப்படாது. மேலும் மேக்கப் கூட இல்லைன்னாலும் காதணி பிரைட் கலர்ல, பெரிதா இருந்தா முகத்தின் லுக்கே மாறிடும். அதே போல் நான் ஒரு டிசைன் செய்தால் அந்த டிசைனை மறுபடியும் வேறு ஒருத்தருக்கு டிசைன் செய்து கொடுக்க மாட்டேன். என் கிட்ட காதணி வாங்கினா அந்த டிசைன் வேறு யாருக்கும் என்கிட்டேயும் கிடைக்காது, அல்லது எங்கேயும் வாங்க முடியாது.
அதேபோல கிளே என்கிறதால் உடைஞ்சிடுமோ என்கிற பயமும் வேண்டாம். பல வருஷம் நல்லாவே உழைக்கும். ரொம்ப பெரிதா இருந்தாலும் போட்டுக்க கனமா இருக்காது, சொல்லப் போனால் காதில் இருக்கறதே தெரியாத அளவுக்கு லேசா இருக்கும். போலவே எவர் சில்வர், அல்லது தங்கம், இந்த மாதிரி உயர்ரக உலோகங்கள் தான் நான் காதணிக்கான கொக்கிகளா பயன்படுத்துவேன். அதனால் துருப்பிடிக்காது, அலர்ஜி வராது. முதல் ரக கிளேதான் என்னுடைய சாய்ஸ்,அதனால் மூலப்பொருட்களும் விலை அதிகம்.
இந்தியா மட்டும் இல்லாம என்னுடைய காதணிகள் உலகம் முழுக்க பலரும் வாங்கிட்டு இருக்காங்க. மேலும் இந்தியா தாண்டி வருகிற ஆர்டர்களுக்கு இன்னும் விலை அதிகமா இருக்கும். இதிலே என்னுடைய நேரமும், பொறுமையும் கூட அடங்கியிருக்கு அதனாலேயே விலை அதிகம். ரொம்ப முக்கியமான விஷயம் நாம சொந்தமா தயாரிக்கற ஒரு பொருளுக்கு நாமளே விலை நிர்ணயம் செய்ய யோசிச்சா மத்தவங்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். வெளிநாடுகளில் எல்லாம் ரூ.6000 வரையிலும் கூட விற்பனை செய்யறேன். சென்னையிலே ஒரு கடையில் என்னுடைய காதணிகள் ஷோகேஸ் செய்திருக்காங்க, சிங்கப்பூரிலும் ஒரு கடையில் நேரடி விற்பனைக்கு இருக்கு. இன்ஸ்டாகிராமிலும் ‘மேக்ஸிமல்_பை_ஏபி’ என்கிற பெயரில் ஆன்லைன் விற்பனையும் இருக்கு’ தன்னம்பிக்கையாக பேசுகிறார் அனிதா பாஸ்கரன்.
– ஷாலினி நியூட்டன்