Monday, June 23, 2025
Home ஆன்மிகம் காதைச் சரியாகப் பயன்படுத்துங்கள்!!

காதைச் சரியாகப் பயன்படுத்துங்கள்!!

by Porselvi

எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதில் முதல் 50 சதவீதம், எதைச் செய்ய வேண்டுமோ, எதைப் பார்க்க வேண்டு மோ, எதைக் கேட்க வேண்டுமோ அவற்றைச் செய்யாமலும் பார்க்காமலும் கேட்காமலும் இருப்பதால் வருவது. மீதி ஐம்பது சதவீதம் எதைப் பார்க்கக் கூடாதோ, எதைக் கேட்கக் கூடாதோ, எதைச் செய்யக் கூடாதோ அதைச் செய்வதால் வருவது.எந்த வேலையும் செய்யாமல் இருப்பவன் பாதி தோல்விதான் அடைவான். செய்யக்கூடிய வேலையை செய்யாமலும் செய்யக் கூடாத வேலையை செய்பவன், எத்தனைச் சுறுசுறுப்பானவனாக இருந்தாலும் முழுமையான தோல்வி அடைந்து விடுவான்.இந்த விஷயம் ஒவ்வொரு புலன் உணர்வுக்கும் பொருந்தும். வைணவத்தில் பகவானைப் பற்றி உரையாசிரியர்கள் ஒரு சொற்றொடர் சொல்வது உண்டு. காணாக் கண். கேளாச் செவி.

இதற்குப் பல தத்துவங்கள் எல்லாம் உண்டு. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.நாம் வாழ்வியலோடு பார்க்கும்பொழுது இதற்கு எளிமையான ஒரு அர்த்தத்தைச் சொல்லி விடலாம்.எதைப் பார்க்கக் கூடாதோ அதைப் பார்ப்பதால் கஷ்டம் வரும். எதைக் கேட்கக் கூடாதோ அதைக் கேட்பதால் கஷ்டம் வரும்.சில பேர் காதுகளை மிகவும் கூர்மையாக வைத்திருப்பார்கள். எந்தச் சிறிய ஒலியாக இருந்தாலும் அவர்கள் காதுகளுக்குக் கேட்டு விடும்.ஆனால், இந்தச் சக்தியை அவர்கள் நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.சில நண்பர்களை நான் பார்த்திருக்கின்றேன். பேசிக் கொண்டே போவோம். திடீரென்று ஒரு நண்பர் ஒரு குறிப்பிட்ட இடத்திலே நின்று விடுவார். ‘‘என்ன வரவில்லையா?” என்று கேட்டால் ‘‘நீங்கள் போங்கள். நான் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்” என்பார்.

என்ன என்று கவனித்தால், அலுவலகத்தின் ஒரு முக்கியமான அறையின் வெளிப்பக்கமாக இருக்கும். அல்லது ஊழியர்கள் ஓய்வெடுக்கும் இடமாக இருக்கும். யாரோ இரண்டு பேர் பேசுகின்ற சத்தம் மிகவும் மெல்லியதாகக் கேட்கும். அந்த இடத்திலே நண்பர் நின்று விடுவார்.ஒரு 10, 15 நிமிடம் கழித்து வந்து சேர்ந்து கொள்ளுவார். அவர் மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி இருக்கும்.கடகடவென்று அவர் தன் காதில் கேட்டதை இன்னும் கொஞ்சம் சேர்த்து விலாவாரியாகச் சொல்ல ஆரம்பித்து விடுவார். அதிலும் இரண்டு பெண்களுடைய குடும்பக் கதையாக இருந்தால் அந்தக் கதை அன்று மாலைக்குள் அலுவலகம் முழுக்கத் தெரிந்து விடும்.இப்படி ஒரு பழக்கம் அவருக்கு. ஆனால், எங்கேயாவது நல்ல கூட்டம், இசை நிகழ்ச்சிகள், ஆன்மிக உபன்யாசங்கள், நூல் வெளியீடுகள் என்று கூப்பிட்டால் வரமாட்டார்.‘‘ஏன் சார், அங்க எல்லாம் போய் டைம் வேஸ்ட் பண்றீங்க?” என்று நமக்கு அவர் அறிவுரை கூறுவார்.

சுருக்கமாகச் சொன்னால் நல்ல விஷயத்தைக் காதில் போட்டுக் கொள்ள மாட்டார். எதற்கும் பயன்படாத, வெறும் சுவாரசியம் மட்டும் இருக்கக் கூடிய, பிறர் வாழ்க்கையை பாதிக்கக்கூடிய அக்கப்போர் விஷயங்களாக இருந்தால், ஆவலோடு கேட்டு அதைப் பத்து பேரிடம் சொல்லி மகிழ்வார்.நான் ஒருமுறை அவரைப்பற்றி இன்னொரு நண்பரிடம் சொல்லும் பொழுது, “அவரை கூப்பிட்டு ஒன்றும் சொல்லாதீர்கள் அவருக்கு காது கேட்காது” என்றேன். அவர் ‘‘என்ன சார், அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஒரு ரகசியம் பேசினாலும் கூட அவர் காதில் துல்லியமாக விழுந்துவிடும் அவரைப் போய் காது கேட்காது என்று சொல்கிறீர்களே” என்றார்.நான் சொன்னேன். ‘‘ஐயா, இதை நான் சொல்லவில்லை திருவள்ளுவர் சொல்லியிருக்கின்றார்”.

‘‘என்ன சொல்லி இருக்கின்றார்?”‘‘நன்றாகக் காது கேட்டாலும், நல்ல விஷயங்களைக் கேட்காமல், எதற்கும் பயன்படாத தீய விஷயங்களையே யார் கேட்கிறார்களோ, அவர்களுக்கு காது கேட்பதும் கேட்காமல் இருப்பதும் ஒன்றுதான். சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் காது கேட்காதவர்கள் தான் என்று சொல்லி இருக்கிறார்.”‘‘அப்படியா சொல்லி இருக்கிறார்?”‘‘நீங்கள் நம்ப மாட்டீர்கள். நான் குறளைச் சொல்லுகின்றேன்”.கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி- (அதிகாரம்: கேள்வி குறள் எண்: 418)கல்லாதவன் கண்ணில்லாதவன்’ என்று சொன்ன வள்ளுவர் கேள்வியை ஏற்றுக் கொள்ளாதவர்களைக் காது கேளாதவர் என்று இங்கு கூறுகின்றார்.காது இருந்தும் கேள்வி அறிவு பெறும் ஆற்றல் இல்லையென்றால் அவரைச் செவிடர் என்றே ஆசிரியர் கூறுகிறார். செவிக்குக் கேட்டறியும் இயல்பு அமைந்தது உயிர்க்கு ஆக்கம் தருவதாகிய அறிவினைக் கேட்டறிவதற்கே.

இயற்கையால் உண்டான செவி போன்ற பொறியானாலும் இயங்காத பொறியால் பயன் இல்லை. அத்தகைய பயன் விளையாத காது கொண்டோரை செவிடு என்றுதான் கருத வேண்டி வரும்.காதுகளின் உபயோகத்தைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கருவில் இருக்கும் குழந்தையின் காதுகள் கருவின் வளர்ச்சிக்கு ஏற்ப படிப்படியாக உருவாகின்றன. ஒன்பது வாரங்களில் காதுகள் உருவாகத் தொடங்கும், மேலும், 25வது வாரத்தில் சத்தங்களுக்குப் பதிலளிக்கத் தொடங்கும். அதனால்தான் கருவில் குழந்தை இருக்கும் பொழுது நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும் என்றார்கள். மென்மையான, அமைதியான இசையைக் கேட்பது நல்லது. தாயின் கருவில் இருந்த பொழுது, பிரகலாதனுக்கு நாரதர் நாராயண மந்திரத்தை உபதேசித்தார் என்று புராணம் கூறுவது பொய் என்று எண்ணி விடக்கூடாது. இன்றைய விஞ்ஞானமும் அதைத்தான் சொல்லுகின்றது. வளைகாப்பு, சீமந்தம் முதலிய சடங்குகளும் இதை உத்தேசித்தே இருக்கின்றன. இது இப்படியே இருக்கட்டும்.

சென்னையில் ஒருமுறை பட்டினத்தாரின் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்ற தலைப்பில் உரையாற்றினேன். இதற்கு எத்தனையோ விதத்தில் பொருளைக் கூறலாம்.ஊசி என்றாலே அதில் ஒரு துளை இருக்கும். அதற்கு காது என்று பெயர். அந்தத் துளை எனும் காதின் வழியே தான் நூலை விட வேண்டும். நூல் என்பது அறிவு (ஞானம்).ஞானம் பெறுவதற்கு நூல் அறிவு தேவை அல்லவா. காதற்ற ஊசியில் நூல் நுழையாததுபோல, நல்ல விஷயங்களை ஏற்காத காது, காதற்ற ஊசிக்குச் சமானம்தான். அவர்களுக்கு இகத்திலும் பரத்திலும் எந்த பயனும் இல்லை என்பதால் தான் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று சொன்னார்.காதின் வழியாக உள்ளே நுழையும் செல்வத்திற்கு கேள்விச் செல்வம் என்று பொருள். வேதத்திற்கு கேள்வி என்று ஒரு பெயர் உண்டு. எதையும் சந்தேகமில்லாமல் கேள்வி கேட்டு பதில் பெற்று ஞானம் அடைய வேண்டும் என்பதால் தான் காது மடலை கேள்விக்குறிபோல் பகவான் படைத்திருக்கின்றான்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi