Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கழுகுமலையில் குப்பையில் கிடந்த ‘தபால்கள்’

*பொதுமக்கள் அதிர்ச்சி

கழுகுமலை : கழுகுமலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய தபால்கள், கட்டுக்கட்டாக குப்பையில் கிடந்த சம்பவம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் கழுகுமலை - கோவில்பட்டி ரோடு சுண்ணாம்பு காளவாசல் பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய தபால்கள், கட்டுக்கட்டாக குப்பையில் வீசப்பட்டு கிடந்தது.

அவை கல்லூரியில் மாணவர் சேர்க்கை, அரசினர் விடுதியில் மாணவர் சேர்க்கை மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய தபால்கள் என்பது தெரிய வந்தது. இதனை அஞ்சல் ஊழியர்கள், குறித்த காலத்தில் விநியோகம் செய்ய தவறியதால், தாங்கள் செய்த தவறை மறைக்க குப்பையில் வீசி இருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதேபோல் கழுகுமலை நடுத்தெருவில் அமைந்துள்ள தபால் அலுவலகத்தில், ஆதார் சேவைக்காக நாள்தோறும் கிராம மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சேவை வழங்கப்பட வேண்டும்.

ஆனால் காலை 8.30 மணி அளவில் அலுவலகத்தில் வந்து காத்திருப்பவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு ஆதார் சேவை வழங்கப்படுகிறது. அதன் பின்னர் வருபவர்களுக்கு டோக்கன் மற்றும் ஆதார் சேவை வழங்க ஊழியர்கள் மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

காலை 8.30 மணிக்குள் வர முடியாத முதியவர்கள் மற்றும் பெண்கள், ஆதார் சேவை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே அரசின் விதிமுறைப்படி பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பணி நேரம் முடியும் வரை ஆதார் சேவை வழங்கப்பட வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.