*சட்டசபையில் கவர்னர் கைலாஷ்நாதன் உரை
புதுச்சேரி : புதுச்சேரியை பொருளாதார வளர்ச்சி மிக்க மாநிலமாக உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கவர்னர் கைலாஷ்நாதன் கூறினார். புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை நேற்று துவக்கி வைத்து கவர்னர் கைலாஷ்நாதன் உரையாற்றினார். அவர் பேசியதாவது:
2024-25ம் ஆண்டில் முத்தியால்பேட்டை நீர் விநியோக அமைப்பை சீரமைத்தல், தலா 1 எம்எல்டி கொள்ளளவு கொண்ட உவர் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கும் ₹171.98 கோடி மதிப்புள்ள திட்டத்துக்கு நபார்டு வங்கி அனுமதி அளித்துள்ளது.
பிரதமரின் ஏக்தா மால் கட்ட ₹104 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுமைக்கும் கைவினை பொருட்களை காட்சிப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் சாத்தியமாகும்.
புதுச்சேரி விமான நிலையத்தின் ஓடுபாதையை 3 ஆயிரம் மீட்டராக விரிவுபடுத்தவும், புதுச்சேரி ரயில் இணைப்பை விரிவுபடுத்தவும் ஆயுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் ₹4.34 கோடி செலவில் 14 இடங்களில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடி தொழிலை பெரிய அளவில் ஊக்குவிப்பதற்கு மீன்வள ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டு குழு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் மீனவர்கள் அந்தமான் கடலை நோக்கி செல்ல ஊக்குவிக்கவும், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக மீன்வளம் உள்ள மண்டலங்களை கண்டுபிடித்து ஆழ்கடல் மீன்பிடிக்கும் வகையில் ஒரு தொழில் கொள்கையை உருவாக்குவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் அரியாங்குப்பம் ஆறு, வம்பாகீரப்பாளையம் முகத்துவாரம், காரைக்கால் அரசலாற்றில் மூன்று மிதவை படகு நிறுத்துவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாசில்லாத பொது போக்குவரத்துக்காக 38 மின்னணு ரிக்ஷாக்கள் ₹96 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளது. அவை சுய உதவி குழுக்கள் மூலம் இயக்கப்படும்.
கடல்பாசி வளர்ப்புக்கான சாத்தியமாக புதுச்சேரியில் 15 இடங்களையும், காரைக்காலில் 10 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. புதுச்சேரியை தற்சார்பு, வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியுடன் கூடிய மாநிலமாக உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு வளர்ச்சியை நோக்கிய எண்ணத்துடன் வழக்கமான பாணியில் இருந்து விலகி தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய மக்கள் நலன் சார்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை தர உறுதிபூண்டுள்ளது. அரசின் சாதனைகளை கூறி உரையை முடிக்கும் இத்தருணத்தில் புதுச்சேரியின் வளர்ச்சி, வளம் மற்றும் முன்னேற்றம் சார்ந்த அனைத்து கருத்துகளையும் இந்த அவை விவாதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.