திருப்போரூர்: திருப்போரூர் அருகே இ-பைக் பேட்டரிக்கு சார்ஜ் போட்டபோது, 2 வாகனங்கள் தீப்பிடித்து முழுவதுமாக எரிந்து எலும்புக்ககூடாகின. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் பாரதி தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (29). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான பேட்டரி பைக்கினை வீட்டின் வெளிப்பகுதியில் நிறுத்தி, சார்ஜ் போட்டுவிட்டு தூங்க சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் வீட்டில் தீ கருகும் துர்நாற்றம் வீசியதால், தூக்கத்தில் இருந்த புருஷோத்தமன் வீட்டின் வெளியே சென்று பார்த்தார்.
அப்போது, சார்ஜ் போட்டிருந்த பேட்டரி பைக்கும், அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சௌந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான மற்றொரு பெட்ரோல் வாகனமும் எரிந்து கொண்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த புருஷோத்தமன் கூச்சல் போட்டார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக மின் இணைப்பை துண்டித்து தண்ணீர் மற்றும் மண்ணால் தீயை அணைத்தனர். மேலும், சிறுசேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 2 பைக்குகளும் முழுவதுமாக தீயில் எரிந்து சாம்பலாயின. இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.