திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாய ஆலையில் சாயக்கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான சாய ஆலை உள்ளது. இதில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். நேற்று(19-05-2025) சுமார் 7 அடி ஆழமுள்ள சாயக்கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்களும் மயக்கம் அடைந்தனர்.
இதனை அடுத்து அவர்களை மீட்ட சாய ஆலை தொழிலாளர்கள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோ மூலமாக கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுண்டமேட்டை சேர்ந்த சரவணன் (30), வேணுகோபால் (31) ஆகியோர் பலியாகினர். மேலும் ஹரி கிருஷ்ணன், சின்னசாமி ஆகிய 2 பேரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் இன்று(20-05-2025) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.