புதுடெல்லி: டெல்லி துவாரகா விரைவு சாலை பணிகளில் நடந்த ரூ.6758 கோடி முறைகேட்டை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர். பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் டெல்லி- குருகிராம் இடையேயான என்எச்.48 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் விரைவு நெடுஞ்சாலை அமைக்க கடந்த 2017ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கமிட்டி ஒப்புதல் அளித்தது. இதில் முதல் கட்ட பணிக்கு, ஒரு கிமீ பணிக்கு ரூ.ரூ.18.20 கோடி செலவில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால்,தற்போது இதற்கான செலவு ஒரு கிமீக்கு ரூ.250.77 கோடி அதிகரித்துள்ளதாக சமீபத்தில் வெளியான மத்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி கி.மீ.க்கு ரூ.18.20 கோடி செலவிட ஒன்றிய அமைச்சரவை அனுமதி அளித்த நிலையில்,தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தன்னிச்சையாக எந்த திட்ட அறிக்கையுமின்றி இதை கிமீக்கு ரூ.250.77 கோடி அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. இதில் ரூ.6758 கோடி முறைகேடு நடந்திருப்பதை கண்டித்து துவாரகா விரைவு சாலையில் நேற்று ஆம் ஆத்மியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா காக்கர், ரீனா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து பிரியங்கா கூறுகையில்,‘‘ இந்த திட்டத்தில் அரியானா பகுதியில் உயர்மட்ட சாலை அமைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முடிவால் கட்டுமான செலவு ரூ.18.2 கோடியில் இருந்து ரூ.251 கோடியாக எகிறியுள்ளது. அதிகமான தொகையை கொண்டு தங்கத்தால் சாலை அமைக்க போகிறார்களா? இதில் மிக பெரிய ஊழல் நடந்துள்ளது. நாடு இதுவரை கண்டிராத மிக பெரிய ஊழல் கட்சியாக பாஜ உள்ளது. தன்னை தானே நேர்மையான அரசு என ஒன்றிய அரசு பெருமைபட்டு கொள்கிறது. ஆனால், அவர்கள் மிக பெரும் ஊழல்களை செய்கின்றனர். மத்திய கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் நிரூபணம் ஆகிவிட்டது’’ என்றார். இதுபற்றி பேசிய சஞ்சய் சிங் எம்பி,‘‘பாரத் மாலா திட்டத்தின் கீழ் 75,000 கிமீ சாலைகள் ஒரு கிமீக்கு ரூ.15 கோடி செலவில் அமைக்கப்பட வேண்டும். ஆனால், மோடி அரசு கிமீக்கு ரூ.250 கோடி என செலவு தொகையை உயர்த்திள்ளது’’ என்றார்.