சென்னை: தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி முதல் பால்பண்ணை வரை உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், துவாக்குடி முதல் பால்பண்ணை வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் பணிகளை விரைந்து முடிப்பதற்கான் ஆய்வு கூட்டம் சென்னை, தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்தது.
பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் செல்வராஜ், தேசிய நெடுஞ்சாலை அலகு தலைமை பொறியாளர் பன்னீர்செல்வம், சிறப்பு அதிகாரிகள் (டெக்னிக்கல்) சந்திரசேகர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் செல்வகுமார், மற்றும் இதர அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்குவழி சாலையாக ஏற்கனவே மேம்படுத்தப்பட்டுவிட்டது. தற்போது துவாக்குடி முதல் பால்பண்ணை வரை சுமார் 14.49 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிலஎடுப்பு பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் கடுமையான ஆட்சேபனை தெரிவித்ததால், திருச்சி நகர் பகுதியில், நான்குவழி சாலையில் சேவை சாலை இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, துவாக்குடி மற்றும் பால்பண்ணை இடையே மொத்தம் 14.49 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்குவழி உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கோரியது.
ஏனெனில் இந்த சாலை திருச்சி மாநகரின் நகரப்பகுதிகளான திருவெறும்பூர், பாரத் கனரக எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் தொழிற்சாலை வளாகம் மற்றும் தேசிய தொழில்நுட்ப கழகம் ஆகியவை உள்ளடக்கி அமைந்துள்ளது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளும் மற்றும் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஒன்றிய அரசை கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.