தூத்துக்குடி: தசரா திருவிழா மற்றும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் விழாவையொட்டி தூத்துக்குடியில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முத்தாரம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பதால் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவை சாப்பிட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக தூத்துக்குடி காய்கறி சந்தையில் வழக்கத்தை விட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அவரை காய் ரூ.80-லிருந்து ரூ.120 வரையும், சின்னவெங்காயம் கிலோ ரூ.80-லிருந்து ரூ.110 வரையிலும் அதிகரித்துள்ளது. பீன்ஸ் ஒரு கிலோ ரூ.70-லிருந்து ரூ.100 வரையும், கத்தரிக்காய் கிலோ ரூ.50-லிருந்து ரூ.70 வரையும், வெண்டைக்காய் கிலோ ரூ.30-லிருந்து ரூ.50 வரையும் விலை அதிகரித்துள்ளது.
உருளை கிழங்கு கிலோ ரூ.60-க்கும், கேரட், சவ்சவ் காய்கறிகள் தலா ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தசரா திருவிழா முடியும் வரை காய்கறிகள் விலை உயர்வு இருக்கும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகம் இருப்பதால் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.