சென்னை: தீபாவளி நேரத்தில் தொடர்ந்து வியாபரிகளையும், வியாபார நிறுவனங்களையும் மிரட்டும் நோக்கத்துடன் பாஜ தலைவர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இது மிரட்டி அடி பணிய வைப்பதற்காகவா, தமிழக வியாபரிகளை அழிப்பதற்கா, வேறு உள் நோக்கம் உள்ளதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சீனிவாசராஜா. இவர், தமிழகம் முழுவதும் அடையாறு ஆனந்த பவன் என்ற பெயரில் சங்கிலித் தொடர் வியாபார நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறார்.
தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம் ஏன் வெளிநாடுகளிலும் இதன் கிளை அலுவலகம் உள்ளன. ஆரம்பத்தில் இனிப்பு, கார வகைகள் மட்டுமே விற்பனை செய்து வந்தவர்கள், தற்போது உணவகங்களிலும் கொடிகட்டி பறந்து வருகின்றனர். இந்நிலையில் அடையாறு ஆனந்தபவன் உரிமையாளர் சீனிவாசராஜா, ஒரு பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சைவ உணவகங்களை நடத்த முடியும் என்று இருந்த நிலை குறித்து கேள்வி எழுப்பியபோது, “எந்த சாதியினரும் எந்த தொழிலையும் மேற்கொள்ள முடியும் என்பதற்கு தந்தை பெரியார் தான் காரணம். அவர் குலத்தொழில் (சாதி அடிப்படையிலான தொழில்) நடைமுறையை மாற்றினார். காலங்கள் மாறியது, அரசாங்கம் கடன் திட்டங்கள் போன்றவற்றின் மூலம் ஆதரவை வழங்கியது, இப்போது எவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தொழிலாக இருந்த இந்த வர்த்தகத்தை மேற்கொள்ளலாம்’’ என்றார்.
இந்தப் பேட்டியில் குலத் தொழிலை ஒழித்தவர் பெரியார் என்று குறிப்பிட்டதால், பாஜவினர் ஆத்திரம் அடைந்தனர். இதனால், பாஜவின் பொருளாளர் சேகர் உள்பட பலரும், இந்த நிறுவனத்தை தவிர்க்க வேண்டும் என்று தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். அதேபோல, நல்லி சில்க்ஸ் நிறுவனம் ஒரு விளம்பர படத்தை வெளியிட்டது. அந்தப் படத்தில், விளம்பர மாடலாக நடித்தவரின் நெற்றியில் பொட்டு வைத்திருக்க மாட்டார். பொட்டு வைக்காமல் எப்படி புடவை விளம்பரத்தில் நடிக்கலாம் என்று பாஜவினர் தற்போது இந்த விளம்பரத்தையும் விவகாரமாக்கி விட்டனர். இந்த நிறுவனத்தையும் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் அவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பண்டிகை காலமான இந்த நாட்களில் பாஜவினர் தமிழக வியாபாரிகளை மிரட்டும் வகையில் இதுபோன்று விமர்சனங்களை செய்வதற்கு கடுமையான கண்டனம் எழுந்துள்ளன. தமிழக வியாபாரிகளை மிரட்டி பணிய வைப்பதற்காக இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்களா அல்லது தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மிரட்டுவதற்கு உள்நோக்கம் உள்ளதா, தமிழக வியாபாரிகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளா என்று தற்போது சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.