*பாசனதாரர்கள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள்
பெரம்பலூர் : அடுத்த வடகிழக்கு பருவமழை காலத்திற்குள் செங்குணம் பெரிய ஏரி மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று பாசனதாரர்கள், பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.பெரம்பலூர் தாலுக்கா, செங்குணம் கிராமத்தில் 133 ஏக்கர் பரப்பில் நீர்வள ஆதாரத்துறை கட்டுபட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் 2 மதகுகள் உள்ளன. இந்த மதகுகள் வழியாக ஏரி தண்ணீர் பாய்ந்து பாசன வசதியை பெறக்கூடிய 128 ஏக்கர் பரப்பிலான நன்செய் நிலங்கள் உள்ளது. நஞ்சை நிலங்களில் ஏற்கனவே முப்போகம் நெல், கரும்பு, கருணை, மஞ்சள் உள்ளிட்ட பல பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வந்திருந்தனர்.
கடந்த பல ஆண்டுகளாக போதிய அளவில் மழை பெய்யாததால் ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்காததால் முப்போகமும் விளைந்த நெல் கிணற்று பாசனத்தின் உதவியுடன் ஒரு போகம் மட்டும் சாகுபடியாகிறது. மஞ்சள், கருணை சாகுபடி பரப்பும் குறைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகள் பலரும் நன்செய் நிலங்களில் முத்துசோளம், பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே நன்செய் நிலங்களில் கரும்பு சாகுபடி செய்வதை காண முடியவில்லை.
இதனிடையே கடந்த 2021ம் ஆண்டு தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையின் போது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் முழுவதுமாக நிரம்பி உபரிநீர் வெளியேறின. இதில் செங்குணம் ஏரியானது அதன் கொள்ளளவை 2021 நவம்பர் 29-ம்தேதி அன்று முதன் முறையாகவும், 2022 ஜனவரி முதல் தேதியன்று 2வது முறையாகவும் முழுவதுமாக நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
ஆனால் செங்குணம் ஏரியில் முழுவதுமாக தேங்கி நின்ற மழை நீர் 4 மாதத்திற்குள்ளாகவே பழுதடைந்து காணப்படும் மதகுகள் வழியாக கசிந்து வெளியேறி பயனற்ற முறையில் மதகில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் வாய்க்கால் வழியாக செங்குணம்-பாலாம் பாடி சாலையில் காணப்படும் செங்குணம் ஆதிதிராவிடர் சுடுகாடு ஓடையில் சென்றடைந்தது.
இதனால் ஏரியில் தேங்கி நின்று காணப்பட்ட மழை தண்ணீர் அளவு குறைந்து. தற்போது வற்றிய நிலையில் மதகுகள் புல் பூண்டுகள் முளைத்து சிதலமடைந்து காணப்படுகிறது. இதனால் நன்செய் பாசனதாரர்கள் உட்பட விவசாயிகளும், பொதுமக்களுக்கும் வேதனையில் உள்ளனர். எனவே நன்செய் நிலங்களுக்கு தேவையான போது தண்ணீர் திறந்து விடும் படியாகவும், தேவையில்லாத போது அடைத்து வைக்கும்படியாக நன்செய் பாசனதாரர் பயன் படுத்தும் படியாகவும், பொது மக்களுக்கு எதிர்காலத்தில் குடிநீர் தட்டுபாடு ஏற்படாத அளவிற்கும் செங்குணம் ஏரியின் மதகுகளை அடுத்த வடகிழக்கு பருவமழை வருவதற்குள்ள சீரமைத்து புதுபித்து தர மாவட்ட நிர்வாகத்திற்கும், நீர்வள ஆதாரத்துறைக்கும், செங்குணம் ஏரி பாசனதாரர் சங்கத்திற்கும், செங்குணம் நன்செய் பாசனதாரர்கள், பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.