*கலெக்டர் மரக்கன்று நட்டார்
திருவண்ணாமலை : துர்கை நம்மியந்தல் அரசு பள்ளியில் நேற்று நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில் கலெக்டர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டார்.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று, காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், திருவண்ணாமலை அடுத்த துர்கை நம்மியந்தல் அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
விழாவில், கலெக்டர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஒரு நாள் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை தொடங்கி வைத்து கலெக்டர் பேசினார். அப்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வில் பள்ளி மாணவர்களின் பங்கு குறித்து கலெக்டர் விளக்கினார்.
மேலும், மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பும், மாலையில் தோட்டம் அமைத்தல், கழிவு மேலாண்மை, வாழ்வியல் வழிமுறைகள் குறித்த களப்பயிற்சியும் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட பசுமை இயக்கம் சரண்யாகுமாரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.