ஜாம்ஷெட்பூர்: துரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 133வது தொடர் கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், ஷில்லாங், கோக்ராஜ்ஹர் ஆகிய நகரங்களில் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கும் இந்தப்போட்டியில், 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
கோக்ராஜ்ஹரில் நடந்த முதல் காலிறுதியில் நார்த் ஈஸ்ட் யுனைடட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய ராணுவத்தையும், ஷில்லாங்கில் நடந்த 2வது காலிறுதியில் ஷில்லாங் லஜோங் 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில் எஞ்சிய 2 காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ளன. ஜாம்ஷெட்பூரில் நடக்கும் 3வது காலிறுதியில் மோகன் பகான்-பஞ்சாப் எப்சி அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான மோகன் பகான் அதிக முறை(17) துரந்த் கோப்பையை கைப்பற்றி உள்ளது. கூடவே ஐஎஸ்எல் தொடரிலும், துரந்த் கோப்பை தொடரிலும் பஞ்சாப் அணிக்கு எதிராக மோகன் பகானே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த 2 அணிகளும் இதுவரை மோதிய 11 ஆட்டங்களில் 4 ஆட்டங்களில் மோகன் பகான் 8ஆட்டங்களில் வென்றுள்ளது. பஞ்சாப் ஒரே ஒரு ஆட்டத்தில் வெல்ல, எஞ்சிய 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. அதேபோல் கொல்கத்தாவில் நடைபெற உள்ள 4வது காலிறுதி ஆட்டத்தில் பெங்களூர் எப்சி-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் களம் காணுகின்றன.
இந்த அணிகள் இதுவரை மோதிய 18 ஆட்டங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே துரந்த் கோப்பையில் சந்தித்துள்ளன. அதில் பெங்களூர் அணிதான் வென்றது. மொத்ததில் பெங்களூர் 10, கேரளா 4 ஆட்டங்களில் வென்றுள்ளன. எஞ்சிய 4 ஆட்டங்கள் டிராவாகின. பெங்களூர் இந்த ஆட்டத்தில் வெல்வதின் மூலம் 2வது முறையாக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை தக்க வைக்கும்.