சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ சந்தித்து பேசினார். அப்போது; தென்காசி மாவட்டம் நடுவப்பட்டியில் இருந்து பருவக்குடி விலக்கு வரை செல்லும் (22.500 கி.மீ) நெடுஞ்சாலையை மாநில சாலையாக தரம் உயர்த்தி அகலப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார். ஏற்கனவே, கடந்த 15.08.2021 அன்று, கடிதம் வாயிலாக இதே கோரிக்கையை நான் வலியுறுத்தியிருந்ததை அமைச்சரிடம் நினைவூட்டினார். நெடுஞ்சாலையை மாநிலச் சாலையாக தரம் உயர்த்தி அகலப்படுத்திட, அச்சாலை போடப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டுமென, துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, இச்சாலையில் 14 கி.மீ தூரம் 2018 – 19 ஆம் ஆண்டில் போடப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. தொழில் நகரங்களாக வளர்ந்து வருகின்ற இராஜபாளையம், கோவில்பட்டியை தூத்துக்குடி துறைமுக நகரத்துடன் இணைக்கும் முக்கியச் சாலையாக இச்சாலை விளங்குகின்றது. இது தவிர, வருவாய் வட்ட தலைநகராக உள்ள திருவேங்கடமும், எங்கள் சொந்த ஊரான கலிங்கப்பட்டியும், தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் ஒரு குறுவட்ட பகுதியான இளயரசனேந்தலும் இச்சாலையின் பிரதான ஊர்களாகவும், அதிக வாகனங்கள் செல்லும் சாலையாகவும் உள்ளது.
எனவே, நடுவப்பட்டி – பருவக்குடி விலக்கு வரை உள்ள 22.500 கி.மீ சாலையில், 14 கி.மீ தூரம் சாலை அமைக்கப்பட்டு, ஐந்தாண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அதனை நடப்பு ஆண்டிலேயே மாநில சாலையாக தரம் உயர்த்திடுமாறும், எஞ்சிய 8.5 கி.மீ சாலையையும் சிறப்பு நிதி ஒதுக்கீட்டில் மாநில சாலையாக தரம் உயர்த்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நேரில் வலியுறுத்தினார். இதற்கு அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.