மும்பை: துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் நடக்கிறது. முதல் ஆட்டம் மட்டும் செப். 5ம் தேதி பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் ஏ,பி, சி, டி என 4 அணிகளாக மோத உள்ளனர். ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இப்போட்டி தலா 4 நாட்கள் கொண்ட ‘டெஸ்ட்’ ஆக நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான 61வது துலீப் கோப்பை போட்டியில் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி ஆகியோருடன் வேகம் பும்ராவும் களம் காணுவார் என்று கூறப்படுகிறது.
செப்.19ல் சென்னையில் தொடங்கும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டுக்கு தயாராகும் வகையில் முன்னணி வீரர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டின் எஞ்சிய 4 மாதங்களில் இந்தியா 10 டெஸ்ட்களில் விளையாட உள்ளது. துலீப் கோப்பைக்கான 4 அணிகளில் ஆர்.அஷ்வின், ஷ்ரேயாஸ், கில், கே.எல்.ராகுல், ஜடேஜா, ஜெய்ஸ்வால், சூரியகுமார், குல்தீப் ஆகியோரும் விளையாடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் முகமது ஷமி இத்தொடரிலும் களமிறங்க வாய்ப்பில்லை என்று பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.