மும்பை: துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்னணி வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் விடுவிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் செப்.5ம் தேதி தொடங்கும் போட்டிகள், பின்னர் 2ம் கட்டமாக ஆந்திரமாநிலம் அனந்தப்பூரில் நடைபெற உள்ளன. உள்ளூர் போட்டிகளிலும் நட்சத்திர வீரர்கள் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டதையடுத்து, புச்சி பாபு கோப்பையில் ஷ்ரேயாஸ் உட்பட பல முன்னணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக துலீப் கோப்பை (4 நாள் போட்டி) தொடரில் ஷ்ரேயாஸ், அக்சர், இஷான், அர்ஷ்தீப், ஜெய்ஸ்வால், ஜடேஜா, ரிஷப், கில், ராகுல், துபே, குல்தீப், ருதுராஜ் என பல முன்னணி வீரர்கள் ஏ, பி, சி, டி என 4 அணிகளில் இடம் பிடித்துள்ளனர்.
இந்த அணிகளுக்கு முறையே சுப்மன் கில், அபிம்ன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டன்களாக செயல்படுவார்கள். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக வேகப் பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ், உம்ரான் மாலிக் முதல் சுற்றில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பி அணியில் சிராஜுக்கு பதிலாக நவ்தீப் சைனி, சி அணியில் உம்ரான் மாலிக்குக்கு பதிலாக கவுரவ் யாதவ் இடம் பிடித்துள்ளார். பி அணியில் இருந்து ஆல் ரவுண்டர் ஜடேஜா விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழக வீரர்களில் பி அணியில் நாராயண் ஜெகதீசன், சி அணியில் பாபா இந்திரஜித், சாய் சுதர்சன் இடம் பிடித்துள்ளனர்.