சென்னை: நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் திடீரென காலமானார். அவருக்கு வயது 56. மாரிமுத்து, தேனி மாவட்டத்தின் பசுமலை கிராமத்தைச் சேர்ந்தவர். திரைப்பட இயக்குநராக விரும்பிய மாரிமுத்து 1990ம் ஆண்டு, தனது வீட்டை விட்டு சென்னைக்கு வந்தார். துவக்கத்தில் உணவகங்களில் பணியாளராக வேலை செய்தார். பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக இணைந்து அவரது படங்களான அரண்மனைக்கிளி (1993), எல்லாமே என் ராசாதான் (1995) படங்களில் பணிபுரிந்தார். பாடலாசிரியர் வைரமுத்துவுடன் இலக்கியம் வழியாக அறிமுகமானார்.
பின்னர் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். சிம்பு நடித்த மன்மதன் (2004) படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார். கண்ணும் கண்ணும் (2008) படத்தில் இயக்குநராக அறிமுகமானார். பிரசன்னா, உதயதாரா ஆகியோர் நடித்த காதல் படம் இது. இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால் விமர்சன ரீதியான பாராட்டை பெற்றது. பின்னர் மலையாள திரைப்படமான சப்பா குரிஷு (2011) படத்தின் கதையை புலிவால் (2014) பெயரில் ரீமேக் செய்து இயக்கினார்.
அஜித்தின் வாலி, விஜய்யின் உதயா படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். மிஷ்கின் இவரை யுத்தம் செய் (2011) படத்தில் குணச்சித்திர நடிகராக அறிமுகம் செய்தார். அதில் அவர் ஊழல் நிறைந்த காவல் அதிகாரியாக நடித்தார். படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆரோகணம் (2012), நிமிர்ந்து நில் (2014), கொம்பன் (2015), மருது (2016), கத்தி சண்டை (2016) உள்ளிட்ட படங்களில் நடித்தார். பெரும்பாலும் காவல் அதிகாரியாக நடித்தார். பரியேறும் பெருமாள் படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. கடைசியாக ‘ஜெயிலர்’ படத்தில் வில்லன் விநாயகனின் கூட்டாளியாக நடித்திருந்தார். அவர் நடித்துள்ள ‘ரெட் சான்டல்வுட்’ படம் இன்று ரிலீசாகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். எதிர்நீச்சல் தொடருக்காக வடபழனியிலுள்ள ஸ்டுடியோ ஒன்றில் நேற்று காலை மாரிமுத்து டப்பிங் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார். மாரிமுத்துவுக்கு மனைவி பாக்கியலட்சுமி, மகன் அகிலன், மகள் ஐஸ்வர்யா உள்ளனர். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் உள்பட திரைக்கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, விஷால், சிம்பு உள்பட பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், பிரபல நடிகருமான மாரிமுத்து மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர் மாரிமுத்து. ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்பு திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ்பெற்றார். இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன. அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும்.