சென்னை: துபாய் பயணிகள் விமானம் இயந்திர ேகாளாறு காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 9.50 மணிக்கு, 312 பயணிகள், 14 விமான ஊழியர்கள் என 326 பேருடன் புறப்பட்டு, ஓடுபாதையில் ஓட தொடங்குவதற்காக, விமானம் நிற்கும் இடத்தில் இருந்து டேக்ஸி வே, டி 1 பகுதிக்கு வந்து கொண்டு இருந்தது. அப்போது விமானத்தில், திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து விமானத்தை அவசரமாக டாக்ஸி வேயில் நிறுத்திவிட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து, விமான பொறியாளர்கள் குழுவினர் மற்றும் விமான நிலைய தரை தளம் பராமரிப்பு ஊழியர்கள் விரைந்து வந்து, அந்த விமானம் மற்ற விமான போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், ஒரு ஓரமாக தள்ளிக் கொண்டு நிறுத்தப்பட்டது. அதோடு விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, பழுதடைந்த இயந்திரங்களை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் விமானத்துக்குள்ளேயே அமர வைக்கப்பட்டனர்.
விமானத்தை பழுது பார்க்கும் பணி தொடர்ந்து நடந்தது. இதனால் துபாய் செல்ல வேண்டிய 312 பயணிகள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, விமானத்துக்குள் இருந்து தவித்தனர். பகல் 12 மணி வரை இயந்திர கோளாறை சரி செய்ய முடியாததால் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் சென்ைன நகரில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அவசரமாக செல்ல வேண்டிய பயணிகளை துபாய் செல்லும் விமானங்களில் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதே நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக, விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு, 312 பயணிகள் உள்பட 326 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.