சென்னை: துபாய் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து, சென்னைக்கு விமானங்களில் கடத்திக் கொண்டுவரப்பட்ட, ரூ.1.30 கோடி மதிப்புடைய, 1.4 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை உள்ளாடை மற்றும் கைப்பையில் மறைத்து வைத்து கடத்திக் கொண்டு வந்த, சென்னையைச் சேர்ந்த 2 பயணிகளிடம், சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். துபாயிலிருந்து தனியார் பயணிகள் விமானம் நேற்று முன்தினம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் சுற்றுலா விசாவில், துபாய் சென்று விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவருடைய உடமைகளையும் பரிசோதித்தனர். உடமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்த போது, அவருடைய உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த, ஒரு பார்சலை எடுத்து பிரித்து பார்த்தனர். அதனுள் சுமார் ஒரு கிலோ எடையுடைய, தங்க பசை இருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து, மற்றொரு தனியார் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளையும் சுங்க அதிகாரிகள் கண்காணித்து சோதனை நடத்தினர். அப்போது பயணி ஒருவரின் கைப்பையில் மறைத்து வைத்திருந்த, தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க பசை மற்றும் கட்டிகளின் சர்வதேச மதிப்பு,சுமார் ரூ.1.30 கோடி என்று கூறப்படுகிறது. இதை அடுத்து தங்கத்தை கடத்தி வந்த இரண்டு பயணிகளையும், சுங்க அதிகாரிகள் பிடித்து வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.