*அரசுக்கு மீனவர்கள் வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கடலோர கிராமங்களில் மீன்களை உலர்த்துவதற்கு அனைத்து மீனவ கிராமங்களிலும், உலர்தளம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் விருதுநகர் மாவட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் உள்ளது.
இங்கு விவசாயத்திற்கு அடுத்தபடியாக செய்யும் தொழில் மீன்பிடி தொழில் ஆகும். இங்கு மீனவர்களால் கடலில் பிடிக்க கூடிய இறால், நண்டு, கனவாய் உள்னிட்ட மீன் வகைகள் உள்நாடு மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், பர்மா, பிலிப்பைன்ஸ், சவுதி அரோபியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின்றது. இதனால் நாட்டிற்கு ஏராளமான அன்னிய செலவாணி கிடைக்கிறது.
குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்பண்னை கிராமம் முற்றிலும் மீனவர் கிராமம் ஆகும். இங்கு 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுடைய ஒரே பிரதான தொழில் என்றால், அது மீன்பிடி தொழில் தான். இங்கு உள்ள மீன்பிடி படகுகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோர்ப்பண்ணை, திருப்பாலைக்குடி தொண்டி, நம்புதானை, சோளியக்குடி, புதுப்பட்டிணம் முள்ளிமுனை, காரங்காடு, தேவிபட்டிணம், முனிவீரன்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் நாட்டு படகுகளில் செல்பவர்கள் இரவில் சென்று மறுநாள் காலையில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பிடிக்கப்படும் மீன்களை ஐஸ் கட்டிகளை பாக்ஸில் போட்டு பாதுகாப்பாக வைத்து கொண்டு கரை திருப்புகின்றனர்.
இதில் ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்களை மட்டுமே ஏற்றுமதி நிறுவன கம்பெனிகள் நேரடியாகவும், சிறு கம்பெனிகள் மூலமாகவும் கொள்முதல் செய்கின்றது. மற்ற மீன்களை ஆர்.எஸ்.மங்கலம். திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, காளையார்கோவில், சிவகங்கை, மதுரை, திருப்பூர், கோயம்புத்தூ,ர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கின்றனர். இவ்வாறு விற்பனை செய்தது போக மீதமுள்ள மீன்களை மீனவர்கள் முழுவதுமாக கெட்டு விடாமல் உப்பு கலந்து கருவாடாக உலர்த்தி விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
கம்பெனிகளில். கொள்முதல் செய்யப்பட்ட மீன்கள் தவிர மற்ற மீன்களை கருவாடாக உலர்த்துவது இங்கு உள்ள மீனவர்களின் வழக்கமாக உள்ள நிலையில் இப்பகுதியில் கருவாடு உணர்த்துவதற்கான உலர் தளங்கள் இல்லாததால் இங்குள்ள மீனவர்கள் மீன்களை உணர்த்துவதற்கு சாலைகளில் போட்டு உலர்த்த கூடிய ஒரு சூழல் உள்ளது.
சாலைகளில் மீன்களை உலர வைப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது மட்டுமல்லாமல், உலர்ந்த கருவாடுகளை வாங்கி உண்பவர்களுக்கும் சுகாதாரமான முறையில் இருப்பதாக இல்லை. இப்பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறகு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அது ஒரு வகைக்கு மீனவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. ஆனால் கருவாடு உலர்த்துவதற்கு கடற்கரை பகுதியில் உலர்தளம் இல்லை என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மோர்ப்பண்னை கிராம மீனவர்கள் கூறுகையில், அரசு சார்பாக எங்கள் ஊரில் மீன் இறகு தளம் அமைத்து கொடுத்துள்ளது வரவேற்க தக்கது. அதில் நாங்கள் மீன் கொண்டு வந்து இறக்குவது மற்றும் மீன் பிடிக்க பயன்படுத்தும் வலைகளை பழுது நீக்குவது, புதியவளைகள் அமைப்பது, ஓய்வு எடுப்பது உள்ளிட்டவற்றிக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
ஆனால் நாங்கள் பிடித்து வரும் மீன்களை கம்பெனிகளில் கொடுத்தது போக மீதி மீன்களை கருவாடாக உலர்த்துவதற்கு மீன் உலர் தளம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு கடந்த ஆட்சியில் குறைந்த அளவு இடத்தில் உலர்தளம் அமைத்து தந்தார்கள்.
அது தற்போது சேதமடைந்து விட்டது. இதனால் மீன்களை கருவாடாக உலர்த்துவதற்கு இடம் இல்லாமல் ரோட்டிலும் நடைபாதைகளிலும் உலர வைக்கிறோம். சில நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் தகராறு வந்து விடுகிறது. எனவே மீனவர்களின் நலம் கருதி கடலோரப் பகுதிகளில் உள்ள அனைத்து மீனவர் கிராமங்களில் கூடுதலான இடங்களில் மீன்களை உலர்த்துவதற்கான (கருவாடு) உலர்தளம் அமைத்து தரவேண்டும் என்றனர்.