இடைப்பாடி: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் முனியப்பன் மகன் விஜய்(23). கொங்கணாபுரம் அருகே பாலப்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி. திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவிக்கும், விஜய்க்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், மாணவியின் வீட்டிற்கு போதையில் நேற்று முன்தினம் சென்ற விஜய், திருமணம் செய்து கொள்ளலாம் வா எனக்கூறி மாணவியை அழைத்துள்ளார். இதற்கு மாணவி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மாணவியை மிரட்ட கிணற்றில் குதித்து தற்கொலை செய்வேன் எனக்கூறிவிட்டு, பாலப்பட்டி அருகே விவசாய கிணற்றில் குதித்தார். அவருக்கு நீந்த தெரியும் என்பதால் மேலே எழுந்து வந்தவர் மீண்டும் குதித்தார். இப்படியாக 4 முறை குதித்து மேலே எழுந்து வந்தவர் 5வது முறையாக குதித்தபோது மேலே வர முடியவில்லை. கிணற்றுக்குள் தவித்தபடி இருந்தார்.
இது குறித்து மாணவியின் உறவினர்கள், கொங்கணாபுரம் போலீசாருக்கும், இடைப்பாடி தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி விஜய்யை உயிருடன் மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என விஜய்யை போலீசார் எச்சரித்து அனுப்பினர். அப்போது, மாணவி தான் விஜய்யுடன் செல்வதாக கூறினார். அவரது உறவினர்கள் அவரை எச்சரித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.