கோவை: போதையில் கார் ஓட்டுவதை தடுக்க கோவை போலீசார் புது முயற்சி எடுத்து உள்ளனர். டிரைவரோட வந்தாதான் சரக்கு கொடுக்கணும்… இல்லைனா வீட்டிற்கு டிரைவரோட அனுப்பணும்… மீறினால் பார் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுப்பது தொடர்பாக கோவை மாநகரில் அனைத்து பார் உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தியுள்ளோம். அதன் வாயிலாக அவர்களது பார்களுக்கு சொந்த வாகனங்களில் வருபவர்கள் திரும்ப செல்லும்போது மது குடித்த நிலையில் வாகனத்தை இயக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார் உரிமையாளர்கள் மது அருந்த வருவோர் சொந்த வாகனத்தில் வந்தால் டிரைவருடன் வரவேண்டும் என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மது அருந்தியுள்ள ஒருவர், சொந்த டிரைவர் இல்லாத சூழ்நிலையில் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வதற்கு தேவையான ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தரவேண்டும். இல்லாவிட்டால் நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுநர் ஒருவர் சம்மந்தப்பட்ட பார் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, அவரது வாகனத்திலேயே அழைத்து சென்று வீட்டில் வீட்டு வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பார்களுக்கு வருபவர்கள் வேறு ஏதேனும் போதைப்பொருட்களை உபயோகிக்கிறார்களா? என்பது குறித்தும், உரிய வயது உடையவர்தானா? என்பது குறித்தும் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும்.
மது குடிக்க வருபவர் நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளிக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட பார் நிர்வாகம் தவறி அதன் மூலமாக ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் நிர்வாகத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். லைசன்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.