தேவாரம்: தேவாரம் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த முருங்கைக்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேனி மாவட்டம், தேவாரம், பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, அனுமந்தன்பட்டி, தே.மீனாட்சிபுரம், ஆனைமலையன்பட்டி, அனைப்பட்டி மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதியில் கத்திரி, முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும், புதினா, கொத்தமல்லி உள்ளிட்ட கீரை வகைகள் என குறுகிய காலத்தில் விளையும் காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதேபோல் முருங்கை மரங்களை நட்டு, நீண்ட கால விவசாயமும் இந்த பகுதிகளில் நடக்கிறது. இங்கு விளையும் காய்கறிகள் தமிழகத்தில் கும்பகோணம், மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுபுகின்றனர்.
இதே போல் கம்பம், தேவாரம், கூடலூர், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பரப்பில் முருங்கை விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்யக்கூடிய மழை காரணமாக, நல்ல விளைச்சல் கிடைத்த நிலையில், வியாபாரிகள் நேரடியாக மார்க்கெட்களுக்கு முருங்கைகாய் கொண்டு செல்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ மார்க்கெட்டில் ரூ.200 முதல் 250 வரை விற்பனை ஆன நிலையில், தற்போது முருங்கைகாய் விளைச்சல் அதிகரித்துளள்ளதால், விலை குறைந்து ஒரு கிலோ ரூ. 15 முதல் ரூ.8 க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘உத்தமபாளையம், தேவாரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கைகாய் விவசாயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கேரளாவின் ஓணம், மற்றும் உள்ளூர் பண்டிகை. திருவிழா காலங்களை அடிப்படையாக வைத்து, விலை கிடைக்கும் என்ற நிலையில் விலை உயர்வு இல்லை. முருங்கைகாய் விளைச்சல் அதிகரிப்பால், விலை படிப்படியாக குறைந்து, ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனையாகிறது. எதிர்காலங்களில் விலைஉயரும் என தோட்டங்களுக்கு முன்பணம் கொடுத்து சென்ற வியாபாரிகள் கூட வாங்க வராமல் உள்ளனர். இதனால் முருங்கைகாய் விலை உயராத நிலை உள்ளது. இதனால் சில்லறை வியாபாரிகளுக்கு விற்று வருகிறோம். இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.