தூத்துக்குடி, செப். 3: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.28 கோடி மதிப்பிலான சாரஸ் போதைப்பொருளை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக வக்கீல் உள்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திரேஸ்புரம் வடபகுதியில் உள்ள கடற்கரையில் நின்றிருந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், 56 பொட்டலங்களில் கஞ்சா செடியில் இருந்து தயாரிக்கப்படும் சாரஸ் என்ற ஒருவகையான போதைப்பொருள் இருந்ததும், அதனை படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.28 கோடி என்று கூறப்படுகிறது. விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி அமல்ராஜ் (46), தெர்மல்நகர் கேம்ப்-2 சுனாமி காலனியை சேர்ந்த நிஷாந்தன் (32), நேவிஸ்புரத்தை சேர்ந்த இன்பென்ட் விக்டர் (31) என்பதும், அமல்ராஜ் வக்கீல் என்பதும், இந்த போதைப்பொருளை ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக தூத்துக்குடிக்கு கடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. பிடிபட்ட மூவர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.