Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போதைப்பொருள் சப்ளை செய்த நபருடன் பாஜ வினோஜ் பி செல்வம் நெருக்கம்: விசாரணை நடத்த போலீசார் திட்டம்

சென்னை: போதை பொருள் விவகாரத்தில் பாஜ நிர்வாகி வினோஜ் பி செல்வத்திடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மது விடுதியில் அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் அடிதடியில் ஈடுபட்டார். அவரை கைது செய்து அவரது செல்ஃபோனை காவலர்கள் ஆய்வு செய்தார்கள். அப்போது பிரதீப் என்ற போதை பொருள் விற்பனையாளருடன் அவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அதனையடுத்து பிரதீப்பை உடனடியாக கைது செய்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இதில், பிரதீப் நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் வழங்கியதாக தகவல் வெளியானது. அதன் விளைவாக ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து வரும் போலீசார், போதைப் பொருள் நெட்-வொர்க்கை முழுமையாக கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், சினிமா பிரபலங்கள் மட்டுமல்ல, பாஜவை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் சிலரும், பிரதீப் குமாரோடு நட்பாக இருந்துள்ள தகவல்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளது. இதில் குறிப்பாக,தமிழக பாஜவின் மாநில செயலாளராக இருந்தவர் வினோஜ் செல்வம். கடந்த தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை விவகாரத்தில் தற்போது போலீசிடம் சிக்கியுள்ள பிரதீப்குமார் மற்றும் நடிகர் கிருஷ்ணா ஆகியோரிடம் வினோஜ் செல்வம் மிகுந்த நட்பும் தொடர்பும் வைத்திருக்கிறார்.

அவர்களுடன் இணைந்து பல்வேறு இரவு நேர பார்ட்டியிலும், பல இடங்களில் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றியும் வந்துள்ளனர். மேலும், பார்ட்டியில் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்த புகைப்படங்களை சேகரிக்கவும் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், பிரதீப் குமாரின் போனை போலீசார் ஆராய்ந்துள்ளனர். அதில் வினோஜ் செல்வம் செல்போன் எண் இருப்பதை கண்டறிந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, பிரதீப் குமாருக்கும் வினோஜ் செல்வத்துக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் வினோஜ் செல்வத்துக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். இது குறித்து வினோஜ் செல்வம் வெளியிட்ட விளக்கம்: எனக்கும், பிரதீப்புக்கும் கடந்த 7 வருடங்களாக தொடர்பு இல்லை. நான் பிரதீப்பின் பழைய நண்பன், திருமணத்திற்கு பிறகு சேலத்திற்கு சென்ற பிரதீப்புடன் 7 வருடங்களாக தொடர்பு இல்லை. பிரதீப் தவறான பாதையில் சென்றது எனக்கு வருத்தமளிக்கிறது.

எனக்கும், இந்த போதை பொருளுக்கும் தொடர்பு இல்லை. 2012-2014 காலகட்டத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. கல்லூரி காலங்களில் படிக்கும் போது நாங்கள் ஒன்றாக விளையாடுவோம். அதனால் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பிரதீப்புடன் எனக்கு தொடர்பு இருந்தால் போலீசார் என்னை விசாரணைக்கு அழைத்திருப்பார்கள். போலீசார் என்னை எந்தவித விசாரணைக்கும் அழைக்கவில்லை.

போதை பொருளுக்கு எதிராக நீண்ட காலமாக குரல் எழுப்பி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறேன். இவ்வாறு விளக்கமளித்துள்ளார். ஏற்கனவே, நடிகர் கிருஷ்ணா இதே போன்று தான் தனக்கு போதை பொருள் பழக்கம் இல்லை என்று சொன்னார். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிக்கினார். அதனால் தற்போது தனக்கும் பிரதீப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறும் வினோஜ் செல்வமும் கூறி வருகிறார். இது உண்மையா, இல்லையா என்பது போலீசாரின் விசாரணையில் தான் தெரியவரும்.