செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் நுண்ணறிவு பிரிவு மூலம் கைப்பற்றப்பட்ட 7,500 கிலோ கஞ்சாவை போலீசார் தீயிட்டு கொளுத்தி அழித்தனர். செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவுகளை எரியூட்டும் நிறுவனம் உள்ளது.
இங்கு வடக்கு மண்டல காவல் துறை எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களிலிருந்து 212 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 956.65 கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருட்களும், நுண்ணறிவு பிரிவு மூலம் தமிழகம் முழுவதிலும் இருந்து கைப்பற்றிய 6,500 கிலோ கஞ்சா என மொத்தம் 7,500 கிலோ கஞ்சாவை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல் தலைமையில் எரிவாயுவில் போட்டு அழித்தனர்.
இதில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், போதை பொருள் நுண்ணறிவு பிரிவு கண்காணிப்பாளர் சாம்சன், செங்கல்பட்டு மாவட்ட கலால் டிஎஸ்பி வேல்முருகன், விழுப்புரம் டிஎஸ்பி பிரதீப்குமார், செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் மருத்துவக்கழிவு எரியூட்டும் நிறுவனத்தின் பொது மேலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.