மும்பை: போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகரின் மனைவி ஃபாலன் குலிவாலாவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெர்சோவா தொகுதியில் ஆசாத் சமாஜ் கட்சி(கன்சிராம்) சார்பில் பாலிவுட் நடிகர் அஜாஸ் கான்(44) போட்டியிட்டார். ஆனால் டெபாசிட் இழந்தார். அவருக்கு வெறும் 155 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஏற்கனவே இவர் கடந்த 2021ம் ஆண்டில், போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறி தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டவர். இதன் காரணமாக அவர் 26 மாதங்கள் சிறையில் இருந்தார்.
இந்நிலையில் அஜாஸ் கானின் மனைவி ஃபாலன் குலிவாலாவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போதைப் பொருள் தடுப்பு பிரவு போலீசார் கூறுகையில், ‘அஜாஸ் கானின் மனைவி ஃபாலன் குலிவாலாவின் வீட்டில் 130 கிராம் போதைப்பொருள் இருந்தது. அவரது வீட்டை சோதனை நடத்திய போது அஜாஸ் கான் இல்லை. அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவரது மனைவியை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.