*வேலூர், ஆம்பூரை சேர்ந்த 2 பேர் கைது
வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே பெங்களூருவில் இருந்து வேனில் கடத்தி வந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்து வேலூர் மற்றும் ஆம்பூரை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கலெக்டர் சிவசவுந்திரவல்லி, எஸ்.பி. ஸ்ரேயாகுப்தா தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு நேற்று வேன் மூலம் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக எஸ்பி ஸ்ரேயா குப்தாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி டோல்கேட் அருகே எஸ்பி தனிப்படை போலீசார் மற்றும் அம்பலூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் மூட்டை மூட்டையாக சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 630 கிலோ போதை புகையிலை பொருட்கள் இருந்தது. இதுதொடர்பாக அதில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் வேலூரை சேர்ந்த சரவணன் (55), ஆம்பூரை சேர்ந்த விக்னேஷ் (30) என்பதும் இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அவற்றை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.