அம்பத்தூர்: கோயம்பேடு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 430 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விருகம்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக, கோயம்பேடு போலீசாருக்கு கிடைத்த தகவல்படி, இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறன், உதவி ஆய்வாளர் யுவராஜ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதியில ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, அங்கு 3 பேர் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவது தெரிந்தது. அவர்களை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பிரகாஷ் (எ) சுருக்கு சூர்யா(23), இவரது கூட்டாளிகள் அருண்குமார்(19), சதீஷ்(26) என தெரியவந்தது. இவர்கள், மும்பையில் இருந்து ஒரு மாத்திரை ₹50 வீதம் வாங்கி வந்து, 10 மாத்திரைகளை ₹3 ஆயிரத்தில் இருந்து ₹5 ஆயிரம் வரை விற்பனை செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்ததும், அந்த பணத்தில் சொகுசாக வாழ்ந்தது தெரிந்தது.
இவர்களிடம் இருந்து 430 போதை மாத்திரைகள் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.