தா.பழூர்,நவ.4: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் தனியார் மருந்து கடையில் பெரம்பலூர் மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கரைமேடு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி வீரமணி மனைவி ரமணா(23) இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும் இரண்டு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.இந்நிலையில் ரமணா 7 மாத கர்ப்பிணியாக இருந்த வந்ததாக கூறப்படுகிறது. ரமணா மூன்றாவதாக கர்ப்பமான நிலையில் கரு கலைப்பு மாத்திரை உட்கொண்ட நிலையில் அதிக உதிர போக்கு காரணமாக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்து அவர் வயிற்றிலிருந்து ஏழு மாத பெண் குழந்தை இறந்த நிலையில் மருத்துவர்கள் அகற்றினர்.
இந்நிலையில் உதிரப்போக்கு அதிக அளவில் சென்றதால் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரமணா சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர் தேவி சந்தேகத்தின் பேரில் தா.பழூர் தனியார் மருந்து கடையில் சோதனை மேற்கொண்டனர்.