சென்னை: கடந்த 4ம் தேதி ஏஎன்ஐயூ போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு, காவல் உதவி ஆணையர் மனோஜ்குமார் தலைமையிலான போலீசார் ஆர்.கே நகர் காவல் போலீசாருடன் ஒருங்கிணைந்து, ரயில்வே யார்டு அருகே கண்காணித்து, மெத்தபெட்டமைன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த 6 பேரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் மெத்தம்பெட்டமைன், 1 கைத்துப்பாக்கி, 15 தோட்டாக்கள், 3 ஐபோன் உட்பட 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்த இளையராஜா என்பவரும் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சிறப்பாக செயல்பட்ட ஏஎன்ஐயூ உதவி ஆணையர் மனோஜ்குமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஜானி செல்லப்பா, ராஜாசிங், உதவி ஆய்வாளர்கள் பொன் பாண்டியன், ஜெயகுமார், தலைமைக் காவலர்கள் சுந்தரமூர்த்தி, முதல்நிலைக்காவலர் மணிகண்டன், காவலர்கள் ஹரி, சுதாகர், ராஜா, கண்ணன், பெண்காவலர் கோபிகா ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் நேற்று நேரில் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியின் போது நுண்ணறிவுப்பிரிவு இணை ஆணையர் தர்மராஜன் மற்றும் துணை ஆணையர் சக்திவேல், உடனிருந்தனர்.