சென்னை: 8 வயது சிறுமிக்கு போதை ஊசி போட்டு பாலியல் தொந்தரவு செய்த உதவி ஆய்வாளர் ராஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 4ம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜி என்பவர் வீட்டிற்கு அழைத்து சென்று, சிறுமிக்கு போதை ஊசி போட்டு பாலியல் தொந்தரவு அளித்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 29ம் தேதி இரவு புகார் அளித்தார்.
அதன்படி, போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மயக்கம் காரணமாக சிறுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டது உறுதியானது. மேலும் அவருக்கு போதை மருந்து ஊசி மூலம் உடலில் செலுத்தியதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது உதவி ஆய்வாளர் ராஜி தனக்கு ஊசி போட்ட சிறிது நேரத்தில் நான் மயங்கிவிட்டேன். அதன் பிறகு உடல் முழுவதும் எனக்கு கடுமையான வலி இருந்ததாக கூறினார்.
பின்னர் போலீசார் சிறுமியின் வாக்குமூலம் மற்றும் டாக்டர்கள் அளித்த அறிக்கையின்படி மகளிர் போலீசார் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ராஜி மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் சிறுமியின் தந்தை உதவி ஆய்வாளர் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போது, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் தந்தை மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.