சென்னை: தமிழ்நாடு காவல்துறை சார்பில், ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. முதல்வருடன் சேர்ந்து கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
கடந்த 2022 ஆகஸ்ட் 10ம்தேதி நடைபெற்ற மாநில அளவிலான போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற நிலையை உருவாக்கிட இலக்கினை நிர்ணயித்தார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஆகஸ்ட் 11ம்தேதி முதல்வர் தலைமையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல் துறை மூலமாக போதைப் பொருட்களை கண்டறிந்து ஒழித்திட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து 2023 ஆகஸ்ட் 11ம்தேதி ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
முதல்வரின் நோக்கத்தினை அடைந்திட தமிழ்நாடு காவல்துறை மற்றும் அமலாக்கப் பணியகம், குற்றப் புலனாய்வு துறை ஆகியவை போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த 2023ம் ஆண்டில் இது தொடர்பாக மொத்தம் 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 14,770 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 23,364 கிலோ கஞ்சா, 0.953 கிலோ ஹெராயின், 39,910 மாத்திரைகள் மற்றும் 1239 கிலோ மற்ற போதைப்பொருட்கள் (கஞ்சா சாக்லேட், மெத்தாபிடமைன், ஆம்பிடாமைன் மற்றும் மெத்தாகுலான்) கைப்பற்றப்பட்டுள்ளன.
நடப்பு 2024ம் ஆண்டில் ஜூன் மாதம் வரை மொத்தம் 4,522 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7,123 நபர்கள் கைது செய்யப்பட்டு, 11,081 கிலோ கஞ்சா, 74,016 மாத்திரைகள் மற்றும் 283.70 கிலோ மற்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக நீதி விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த 2022 ஆகஸ்ட் 11ம்தேதி முதல் இதுவரை 76 போதைப் பொருள் வழக்குகளில் சம்மந்தப்பட்ட 154 குற்றவாளிகளுக்கு எதிராக நீதிவிசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் 45 எண்ணிக்கையிலான சுமார் ₹18.15 கோடி மதிப்புடைய அசையும், அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றவாளிகளின் சுமார் 5 லட்சம் ரூபாய் இருப்பு கொண்ட 8800 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டில் 2024 ஜூன் வரை, சுமார் 8.20 லட்சம் பொதுமக்கள் கலந்து கொண்ட சுமார் 23,350 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்முறை கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்றைய தினம் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியினை சுமார் 1500 கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஏற்றுக் கொண்டனர்.
கடந்த மே, 2022ம் ஆண்டு முதல் ஜுன் 2024 வரை மாநிலம் முழுவதும் 266 மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பான பணியாற்றியதற்காக 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை, தேனி மாவட்ட எஸ்பி சிவபிரசாத், சேலம் மத்திய புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜகன்னாதன், சென்னை மத்திய புலனாய்வுப் பிரிவு எஸ்ஐ ராஜ்குமார், மதுரை மாவட்டம் ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலைய எஸ்எஸ்ஐ அருண், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலைய ஏட்டு துரை ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை போலீஸ் கமிஷனர் ஆ.அருண், அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி அ.அமல்ராஜ், மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
போதைப்பொருளை வேரறுக்கும் அரசுக்கு துணை நிற்பேன்…
முதல்வர் முன் மாணவர்கள் ஏற்ற உறுதிமொழி:
* போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்.
* நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்.
* எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.
* பழக்கத்திற்கு உள்ளானவர்களை போதைப்பொருட்களில் இருந்து மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.
* போதை பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணைநிற்பேன்.
* மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என உளமார உறுதி
கூறுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, மாணவர்கள் அதை உறுதிமொழியாக ஏற்றுக் கொண்டனர்.