மதுரை: போதைகாளான் விற்றதாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலைச் சேர்ந்த சாலமன், ஜெயந்தி, விக்டோரியா ராணி, ஹெலன் மேரி, பிரிகட் ஆகியோர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
கொடைக்கானல் ஏரி பகுதியில் எங்களுக்கு சொந்தமாக பங்களாக்கள் உள்ளன. அந்த பங்களாக்களை சட்டவிரோதமாக அபகரிக்க ஒரு தரப்பினர் உரிமை கோருகின்றனர். எங்களை வெளியேற்ற பலவித முயற்சிகளை மேற்ெகாண்டுள்ளனர். இதனிடையே எங்களை போதைகாளான் விற்றதாக கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் பிரச்னை இருந்துள்ளது. இது குறித்து மனித உரிமை ஆணையமும் விசாரித்துள்ளது. இந்த சூழலில் போதை காளான் விற்றதாக வழக்கு பதிந்துள்ளனர். மனுதாரர்கள் தொடர்ந்து சிறையில் இருப்பதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை கொடைக்கானல் போலீசாரிடமிருந்து, திண்டுக்கல் சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்படுகிறது என உத்தரவிட்டார்.