Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போதைக்கு அடிமையாவதை தட்டிக் கேட்டதால் முன்விரோதம்; நண்பனின் அண்ணன் வெடிகுண்டு வீசி கொலை: 2 பேர் சீரியஸ்; 5 பேரை கைது செய்து விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கஞ்சா போதைக்கு அடிமையாவதை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தாலும் பழிக்குப்பழியாகவும் நண்பனின் அண்ணன், நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம், காந்தி நகர் பகுதியில் நேற்றிரவு 10.45 மணியளவில் முகேஷ், தீபன், ஜாவித் ஆகிய 3 பேர் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல், 3 பேர்மீதும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், சம்பவ இடத்திலேயே முகேஷ் (25) என்பவர் படுகாயம் அடைந்து, உயிருக்கு போராடினார். மேலும் தீபன், ஜாவித் ஆகிய 2 பேரையும் மர்ம கும்பல் கத்தியால் சரமாரி வெட்டியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

மேலும், தீபன்மீது வெடிகுண்டு சிதறியதில், அவரது கை, தோள் பட்டையில் படுகாயம் ஏற்பட்டது. ஜாவித்துக்கு தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மர்ம கும்பல் இருசக்கர வாகனங்களில் தப்பி சென்றது. படுகாயம் அடைந்த தீபன், ஜாவித் ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஜாவித் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீபன் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

படுகாயம் அடைந்த முகேஷை பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மப்பேடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், நாட்டு வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த முகேஷ், வீடுகளுக்கு காஸ் சிலிண்டர் போடும் வேலை பார்த்துள்ளார். இவரது தம்பி ஜீவா (21). இவரும் சின்னமண்டலி கிராமத்தை சேர்ந்த நண்பர் ஆகாஷ் (19) என்பவரும் சேர்ந்து கஞ்சா புகைப்பது உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தம்பி ஜீவாவை அண்ணன் முகேஷ் கண்டித்து வந்துள்ளார். மேலும், நண்பர் ஆகாஷுடன் தம்பி ஜீவாவை சேரவிடாமல் தடுத்து, தன்னுடன் சிலிண்டர் போடும் வேலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதில் ஆத்திரமான ஆகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகள், பேரம்பாக்கத்தில் நேற்றிரவு தனது நண்பர்களான ஜாவித், தீபன் ஆகியோருடன் நின்று பேசிக்கொண்டிருந்த முகேஷ்மீது 3 நாட்டு மற்றும் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில் முகேஷ்மீது நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பரிதாபமாக பலியானார். மேலும், அவரது நண்பர்களான ஜாவித், தீபன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், கஞ்சா விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் முகேஷுக்கும், தம்பி ஜீவாவின் நண்பர் ஆகாஷுக்கும் இடையே அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆகாஷின் காதை முகேஷ் வெட்டியதாகவும் தெரியவந்தது. இதில் முகேஷ் உள்பட 2 பேரை ஏற்கெனவே போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சொந்த ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இதனால் ஆத்திரமான ஆகாஷ் பழிக்கு பழியாக, முகேஷ்மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி படுகொலை செய்திருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பாக இன்று காலை ஆகாஷ், சஞ்சய், நாட்டாமை, கோபாலகிருஷ்ணன், கமலக்கண்ணன் ஆகிய 5 பேரை கைது செய்து, திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி, இன்ஸ்பெக்டர் மாலா தலைமையில் மப்பேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் நிலவியது.