சென்னை: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை முனைவர் ராமசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். 2023ம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநரும், செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பு அலுவலருமான முனைவர் க.ராமசாமி தேர்வு செய்யப்படடார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞரின் சிலையும் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
தொடர்ந்து, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும், பண்டைய தமிழ்ச் செவ்விலக்கியங்களும் நடுகற்களும், மணிமேகலை வழக்குச் சொல்லகராதி, சங்க இலக்கியத்தில் கடல் வணிகமும் பண்பாட்டுப் பரிமாற்றங்களும் ஆகிய நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, இயக்குநர் சந்திரசேகரன், பதிவாளர் புவனேஸ்வரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.